யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி ஒருவர், இளைஞன் மீது தாக்குதல் நடத்தி, ஒரு தொகை பணத்தை அபகரித்தமை தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் , தாக்குதலாளியான போதை ஆசாமியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நேற்றைய தினம் சனிக்கிழமை நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.
அதன்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்த போது, இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.
இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.
அதன்போது, அருகில் உள்ள கடை பணியாளர்கள் வீதியில் சென்றவர்கள் என பலரும் அதனை வேடிக்கை பார்த்திருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
காணொளியின் அடிப்படையில் , விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார், தாக்குதலாளியான போதை ஆசாமியை கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை குறித்த நபரின் தாக்குதலுக்கு இலக்கான நபர் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் , பொலிஸாருக்கு அறிவித்தால் , மேலதிக சட்ட நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கும் என பொலிஸார் கோரியுள்ளனர்.
