காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியும், அவற்றினை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என அதனை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் ஆர்வமின்றி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கும் – சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த சில தினங்கள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் நிலவிய பனிமூட்டம் , காற்று மாசு காரணமாக விமான ஓடு பாதையை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் விமானங்களை தரையிறக்க முடியவில்லை என விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டது.
விமான நிலையத்தின் ஓடு பாதையில் மின்விளக்குகளை கூட பொறுத்தாது உள்ளார்கள் என்ற விடயத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்திய வணிகர்கள் அல்லது பெரும் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வர கூடாது கொழும்பின் ஊடாகவே வருகை தர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றார்கள் என அறிந்து கொண்டேன்
காங்கேசன்துறை துறைமுகம் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்பவை வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பயன்பட கூடிய முனையங்கள். அவற்றை மேம்படுத்த கூடாது என்பது குறியாக உள்ளார்கள்
இந்த இரண்டு முனையங்களையும் , இந்திய அரசு பொறுப்பேற்று கட்டமைக்க உதவ முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே ,
எல்லா வர்த்தக தொடர்புகளும் ,, கொழும்பு வழியாக தான் நடக்க வேண்டும் என தென்னிலங்கை நலன் சார்ந்த அடிப்படையில் செயற்படுகின்றனர்
பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
அது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் முறையிடுவேன் என தெரிவித்தார்.
