பிரான்ஸ் தொழிற்சங்கங்கள், மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இணைந்து போராட்டம்
பிரான்சில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 6 இலட்சம் பேர் பங்கேற்றதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.
நிதி திட்டமிடு
ஐந்து முக்கிய தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், ரயில்வே பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அஞ்சல் துறைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்களின் எண்ணிக்கை பிற்பகலில் 2 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்த நிலையில், மாலைக்குள் 6 இலட்சமாக அதிகரித்ததாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
மார்சேய், லியோன், நான்டெஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலையிலேயே போராட்டங்கள் ஆரம்பமாகின. தலைநகர் பாரிஸில் பிற்பகல் 2 மணியளவில் பிரதான பேரணி தொடங்கியது. அங்கு மாணவர்களும் ஏனைய போராட்டக்காரர்களும் குப்பைத் தொட்டிகளைக் கொண்டு வீதியொன்றை மறித்ததைத் தொடர்ந்து, கலவரத் தடுப்புப் பொலிஸாருடன் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிட்டானி பிராந்தியத்தின் ரென்னஸ் நகரில் முகமூடி அணிந்த சிலர் வீதிகளை மறிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துலூஸ் நகருக்கு அருகிலுள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும் பிரெஞ்சு ஊடகமான பிஎஃப்எம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்களை முன்னெடுத்த தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான சம்பள உயர்வு வழங்குதல், வரி முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் இளைஞர்களுக்குச் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
மேலும், பொதுச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பிரான்சின் ஆசிரியர்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் முற்றுகைகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக உயர்நிலைப் பாடசாலைகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான மின்சார நிறுவனமான EDF இன் தகவலின்படி, மின்சாரத் துறைத் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்துள்ளன. அதேவேளை, ரயில்வே சேவைகளில் குறைந்தளவிலான இடையூறுகளே ஏற்படும் என அரச ரயில்வே நிறுவனமான SNCF எதிர்பார்த்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
பாரிஸில் நடைபெற்ற பிரதான பேரணி மாலைக்குள் நிறைவடைந்து, போராட்டக்காரர்கள் படிப்படியாகக் கலைந்து சென்றதாக ‘லெ மாண்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
