அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் திங்களன்று பாப்பாண்டவர் போப் லியோ XIV தலைமையில் நடைபெற்ற திறந்தவெளித் திருப்பலியில் சுமார் 25 இலட்சம் மக்கள் கலந்துகொண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாப்பாண்டவர் லியோவின் தற்போதைய போப்பாட்சிக் காலத்தில் நடைபெற்ற கூட்டங்களிலேயே இதுவே மிகப்பெரியதாகும்.
அவெனிடா டெல் லிபர்டடோர் வீதியில் பல மைல்கள் தொலைவுக்குப் பக்தர்கள் திரண்டிருந்தனர். திறந்த மேற்கூரையுடைய போப்மொபைலில் பாப்பாண்டவர் லியோ பயணித்தபோது, மக்கள் வத்திக்கான் கொடிகளை அசைத்தவாறு உற்சாக முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.
உங்களுடன் கொண்டாடுவது என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது என்று திருப்பலியின்போது பாப்பாண்டவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை
திருப்பலிக்கு முன்னதாக, பியூனஸ் அயர்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள கிளேபோலில் அமைந்துள்ள கோட்டோலெங்கோ டான் ஓரியோன் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையத்திற்கு பாப்பாண்டவர் சென்றார். அங்கு 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களைச் சந்தித்துப் பேசிய பாப்பாண்டவர், மனித வாழ்க்கை ஒரு சுமையல்ல; அது ஒரு வரம் என்று குறிப்பிட்டார். மேலும், பொருளாதார வெற்றியை மட்டுமே ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் அளவுகோலாகக் கருத முடியாது என்றும் தெரிவித்தார்.
“மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட அனைவரையும் ஒரு நாடு எந்த அளவிற்கு அரவணைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே அதன் முன்னேற்றம் மதிப்பிடப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேயின் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சமூக நலச் சேவைகளுக்கான நிதியைக் குறைத்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சமூகத்தின் பாதிக்கப்பட்ட பிரிவினரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பாப்பாண்டவர் எடுத்துரைத்தார்.
மிலேயின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த கவலை
அதிபர் ஜாவியர் மிலே பதவியேற்ற பின்னர், அரசாங்கச் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளிலும் நிதி ஒதுக்கீட்டிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு நிதியை அதிகரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியபோதிலும், அதிபர் மிலே அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார். பின்னர் நாடாளுமன்றம் அந்த வீட்டோவை நிராகரித்தது. இருப்பினும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நிதி ஒதுக்கீடு குறித்து அர்ஜென்டினா செனட் சபை பரிசீலிக்கவுள்ளது.
