அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயது நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஈரானின் தூண்டுதலின் பேரில் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளபதி காசெம் சுலைமானி, 2020 ஜனவரியில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சதித்திட்டத்தின் இலக்குகளாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் நிக்கி ஹேலி ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
டிரம்பின் தேர்தல் பேரணிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்ததுடன், அரசியல் பேரணியில் படுகொலை நடத்துவதற்காக ஆட்களைச் சேர்க்கவும் குற்றவாளி முயன்றுள்ளார். இதற்காக உறவினர் ஒருவரிடமிருந்து 5,000 அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்று, கொலைக்கான கூலிப்படையினர் எனக் கருதியவர்களிடம் வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசியல் செய்திகள்
எனினும், அவருடன் தொடர்புகொண்ட ஒருவர் பின்னர் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் வழங்கும் நபராக மாறியதால் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
2024 ஜூலை மாதம் டெக்சாஸ் மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், மார்ச் மாதம் நடுவர் மன்றம் அவரைக் குற்றவாளியாகத் தீர்மானித்தது.
தேசிய எல்லைகளைக் கடந்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றமை மற்றும் கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றங்களுக்காக 330 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிரம்ப் மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.
