பொதுவாகச் சொல்வார்கள்: “ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்,” என்று.அது உண்மையா என்று
எனக்குத் தெரியாது.
ஆனால் என் முயற்சிகளுக்குப் பின்னால் நிச்சயமாக என் கணவர் இருக்கிறார்.
முப்பது வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஒன்றாக பயணிக்கிறோம். அதில் இருபது வருடங்களுக்கும் மேல் நான் என் “கலைத்தாகத்தை” தீர்க்க ஓடிக்
கொண்டிருக்கிறேன்.
ஒத்திகைகள், shooting நாட்கள், நள்ளிரவு script திருத்தங்கள், எண்ணிக்கையில்லாத editing இரவுகள் “இது கடைசி project” என்ற பொய்கள் எல்லாவற்றையும் அவர் சகித்துக்கொண்டார். அவருடைய பொறுமையைப் பார்த்தால் புத்தர் கூட ஒரு tips கேட்டுவிட்டுப் போயிருப்பார். ![]()
ஆனால் அது மௌனமாகப் பல்லைக் கடித்துக்கொண்டு சகிக்கும் பொறுமை இல்லை. “சரி, எப்போது தொடங்குகிறோம்?” என்று கேட்டு camera-வை
எடுத்து வைக்கும் பொறுமை அது.
இந்தக் கலைப்பயணத்தில்
போராட்டங்கள் ஏராளம். வீட்டுக்குள் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. போர்க்களம் முழுக்க வெளியே தான் இருந்தது.
“பொம்பிளை director-ஆ? கதை யார் எழுதினது?” என்று கேட்பவர்களும்,
நாடகம் முடிந்ததும் “நல்லாத்தான் இருந்தது, ஆனா…” என்று தொடங்கும் விமர்சகர்களும், (அவர்களுடைய “ஆனா”வுக்குப் பின்னால் எப்போதும் ஒரு “பெண்” ஒளிந்திருந்தது.) இருந்தார்கள்.
“இவக்கு இது தேவையா?” என்ற
கேள்விக்கு நான் பதில் சொல்லி
சலித்து விட்டேன்.
ஒவ்வொரு வெற்றிக்கும் நான்
ஒரு ஆணை விட,
இரண்டு மடங்கு அதிகமாக
உழைக்க வேண்டியிருந்தது.
இந்தப் போர்களிலிருந்து நாம் வீடு திரும்பியபோதெல்லாம் அவர் கேள்வி கேட்கவில்லை, அமைதியாக
camera battery யை charge இல் போட்டுவிட்டு, “அடுத்த show எப்போ?” என்று மட்டும் கேட்பார். பொறுமை என்பது சகித்துக்கொள்வது மட்டும் இல்லை, மீண்டும் களத்துக்கு அனுப்புவதும் தான், என்று அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்.
பல ஆண்கள் மனைவியைப் பூ போலப் பார்த்துக்கொள்வது தான் ஆண்மை என்று நினைக்கிறார்கள். வெயில் படக்கூடாது, காற்று அடிக்கக்கூடாது, தனியாக bus ஏறக்கூடாது. “நீ ஏன் கஷ்டப்படணும், நான் இருக்கிறேன்?” என்று சொல்வார்கள். கேட்க அன்பாகத் தான் இருக்கிறது.
ஆனால் பூ ஓர் இடத்திலேயே நிற்கும்.
அதை vase இல் வைத்தால் இரண்டு நாளில் வாடிவிடும்.
பெண் பூ அல்ல. அவளுக்குச் சிறகுகள் இருக்கின்றன. அந்தச் சிறகுகளைக் கணவன் கொடுக்கவில்லை, அவை ஏற்கனவே இருந்தன. அவன் செய்ய வேண்டியது அவற்றை வெட்டாமல் இருப்பது மட்டும்தான். தங்கக் கூண்டு எவ்வளவு மின்னினாலும் அது கூண்டுதான். அதற்கு “பாதுகாப்பு” என்று பெயர் வைத்தாலும் கம்பிகள் கம்பிகளாகவே இருக்கும்.
உண்மையான ஆண்மை கதவைத் திறந்து வைப்பதில்தான் இருக்கிறது. அவள் பறக்கும்போது “எங்கே போகிறாய்?” என்று தடுப்பதில் இல்லை, அவள் விழுந்தால் “நான் அப்போதே சொன்னேன்” என்று சொல்லாமல், காயத்துக்கு மருந்து போட்டு மீண்டும் வானத்தைக் காட்டுவதில் இருக்கிறது.
இதைச் எழுத நான் பெரிய பெண்ணியவாதியாக இருக்க வேண்டியதில்லை. முப்பது வருடங்களாக ஒருவர் அதைச் செய்வதைப் பக்கத்தில் இருந்து பார்த்தாலே போதும்.
அதனால் ஆண்களே,
மனைவியின் கனவுக்குப் பின்னால் நிற்பது உங்களைச் சிறியவராக்காது, என்று புரிந்து கொள்ளுங்கள். அது உங்களை அவளின் கதையின் கதாநாயகனாக மாற்றும்.
நான் கனவுகள் கண்டேன்.
அவர் அதற்கு ஒளி அமைத்தார்.
என் கனவுகள் அவருடையவை அல்ல. ஆனால் அவற்றுக்கு அவர் எப்போதும்
இடம் கொடுத்தார்.
தன் தோளில், தன் நேரத்தில்,
தன் பொறுமையில்.
என் கனவுகளை வாழ விடுவதற்கு நன்றி. அதைவிட, அந்தக் கனவுகளுக்குள் என்னை நானாகவே இருக்க விட்டதற்கு நன்றி.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
எனது உயிரின் ஒளிப்பதிவாளருக்கு. ![]()
