அரசியல், வரலாற்று மற்றும் சமூகவியல் ரீதியில், ஒரு விடுதலைப் போராட்டம் எப்போது பயங்கரவாத இயக்கமாக மாறுகிறது?
அதற்கான அந்த எல்லைக்கோடு எங்கு வரையப்படுகிறது?
பொதுவாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு தன் போக்கையும் வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளும் போது அது பயங்கரவாத இயக்கமாக மாறுகிறது என்ற உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
ஆரம்பத்தில் உரிமைகள், சமத்துவம் அல்லது தன்னாட்சிக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம், காலப்போக்கில் ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது சித்தாந்தங்களை வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்ற நிலைக்கு மாறும்போது (Shift in Objectives) அதன் தன்மை மாறி பயங்கரவாதம் என்ற வகைக்குள் காலடி வைக்கிறது.
இராணுவ இலக்குகளைத் தாண்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான குண்டுவெடிப்புகள், படுகொலைகள் மற்றும் மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துதல் போன்ற வழிமுறைகள் ( Methods of Violence) பயங்கரவாதத்தின் முக்கியக் கூறுகளாக பார்க்கப்படும்.
ஜனநாயக வழிகளையோ அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகளையோ முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு (Rejection of Diplomacy) வன்முறை மட்டுமே ஒரே தீர்வு என்ற நிலைக்கு அமைப்பு வரும் போது அது பயங்கரவாத அமைப்பாக மாறுகிறது.
ஆரம்பத்தில் மக்களின் ஆதரவோடு இயங்கும் அமைப்புகள், காலப்போக்கில் அதே மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களைப் பயமுறுத்திக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் போது பயங்கரவாத இயக்கமாகச் சித்திரிக்கப்படுகின்றன.
போர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் குழந்தைகளைச் போரில் ஈடுபடுத்துவது, கட்டாய ஆள்சேர்ப்பு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவது, தற்கொலை குண்டு தாக்குதல் போன்ற செயல்கள் விடுதலை போராட்ட அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு, ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாக அது எவ்வாறு சர்வதேசத்தால் ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டது என்பதனை அனைவரும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
“தமிழர்கள்” என்ற ஒட்டுமொத்த இன அடையாளத்தை முன்வைத்து, ஒரு பயங்கரவாத இயக்கம் செய்த கொடூரமான தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் வெள்ளையடிக்க (நியாயப்படுத்த) முயல்வது வரலாற்றுத் துரோகம்.
அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் செய்யப்படும் அவமதிப்பு.
ஒரு இனம் என்பது கோடிக்கணக்கான மக்களின் கலாச்சாரம், மொழி, வாழ்வியல் மற்றும் மனித உரிமைகளைக் கொண்டது. ஆனால், பயங்கரவாதம் என்பது குறிப்பிட்ட சிலரின் அதிகார வெறிக்காகவும், வன்முறை வழிகளுக்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
எந்த ஒரு இனமும் இயற்கையாகவே வன்முறையை விரும்புவதில்லை.
எனவே, ஒரு பயங்கரவாத இயக்கம் செய்த படுகொலைகள், கட்டாய ஆள்சேர்ப்பு, மற்றும் ஜனநாயகப் படுகொலைகளை “தமிழர்களின் விடுதலை” என்ற பெயரில் நியாயப்படுத்துவது, ஒட்டுமொத்த தமிழினத்தையே வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதற்குச் சமம்.
உலக நாடுகள் எங்குமே பயங்கரவாதத்தை அதன் கொடூரத்திற்காகத்தான் எதிர்க்கின்றனவே தவிர, இனத்திற்காக அல்ல.
உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை எதிர்க்க காரணம் புலிகளின் கொடூர செயல்களுக்காகவே தவிர தமிழர்களை வஞ்சிப்பதற்காக அல்ல.
ஆரம்ப காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் மிதவாதத் தலைவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் நின்று போராடியபோதும், வட்டுக்கோட்டை தீர்மானம் போன்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்தபோதும், விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை முழுமையாகத் முன்னிறுத்தியது.
தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட போதிலும், மாற்றுக்கருத்துக்கொண்ட மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்கள் (அமிர்தலிங்கம் போன்றோர்), தமிழ் ஊடகவியலாளர்கள் , அறிஞர்கள் ( நீலன் திருச்செல்வம்)மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது ஜனநாயக விரோதப் போக்கின் தொடக்கமாக அமைந்தது.
ஒரு விடுதலைப் போராட்டம் என்ற வரையறையை மீறி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவிச் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்கள் உலகளவில் அதுவொரு பயங்கரவாத இயக்கம் எனப் பெயர் பெற முக்கியக் காரணமாக அமைந்தது.
அநுராதபுரம் ஸ்ரீ மகா போதி படுகொலை (1985), காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை (1990) போன்ற நிகழ்வுகளில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது முதல் கொழும்பு மத்திய வங்கித் தாக்குதல் (1996), Pettah, Dehiwala பஸ் மற்றும் இரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள், மூலமாக நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுகுவித்தமை புலிகளை சர்வ தேச ரீதியில் “பயங்கரவாதிகளாக” பரிணாமிக்க வைத்தது.
புலிகளின் இத்தகைய வன்முறை வழிமுறைகள், குறிப்பாக அரசியல் தலைவர்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்கள் (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை – 1991, இலங்கை அதிபர் ரணசிங்க பிரமதாசா படுகொலை – 1993) , உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
இதற்கு எல்லாம் மகுடம் வைத்தால் போல் புலிகளை ஒழித்தே தீர வேண்டும் என சர்வதேசம் முடிவெடுக்க வைத்த கட்டுநாயக்க விமானத்தாக்குதல் புலிகளை ஒரு மோசமான பயங்கரவாதிகளாக உலகிற்கு அடையாளப்படுத்தின.
இதன் காரணமாக, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ கொடூர பயங்கரவாத ( Most Ruthless Terrorist organisation) அமைப்பாக அறிவித்தன.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறி, பல்லாயிரக்கணக்கான பள்ளி வயதுச் சிறுவர்களை “படைத்துறை பள்ளி” ஊடாக சிறுவர்களை படைகளில் கட்டாயமாக இணைத்து, அவர்களைப் போர்க்களத்திற்கு முன்னரங்கப் போராளிகளாகப் பயன்படுத்தியமை மிகப்பெரிய மனிதாபிமானக் குற்றமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின்போது (2009), முல்லைத்தீவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைத் தப்பியோட விடாமல் தடுத்து, தப்பியோடியவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, அவர்களைப் போர்க்களத்தில் மனிதக் கேடயங்களாகப் (Human Shields) பயன்படுத்தியமை அந்த அமைப்பின் மீதான இறுதிக் கட்ட நம்பிக்கையையும் முற்றிலுமாகச் சிதைத்தது.
ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்பட்ட இயக்கம், காலப்போக்கில் தன் சொந்தக் கொள்கைகளுக்கு முரணாக மாற்றுக்கருத்துக்களை அடக்குவது, பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குவது, தற்கொலைத் தாக்குதல்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவது மற்றும் சர்வதேச நெறிமுறைகளை மீறியதன் காரணமாகவே முழுமையான பயங்கரவாத இயக்கமாக உருமாறியது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியாகவும், உரிமைகளுடனும், கெளரவமாகவும் வாழ வேண்டுமானால், கடந்த காலத்தில் நடந்த தவறுகளையும் வன்முறைகளையும் பக்கச்சார்பில்லாமல் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.
புலிகள் செய்த எல்லாமே சரி” என்று முட்டாள்தனமாக வாதிடுவதும், பயங்கரவாதச் செயல்களுக்கு வெள்ளையடிக்க முயல்வதும் எதிர்காலத் தலைமுறையினரைத் தொடர்ந்து வன்முறைச் சிந்தனைக்குள்ளேயே வைத்திருக்கும்.
இது தெற்கில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்திற்கும் வடக்கில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையே நிரந்தர நல்லிணக்கம் ஏற்படுவதைத் தடுத்துவிடும்.
தமிழர்கள் என்பவர்கள் கல்வி, கலை, பண்பாடு மற்றும் உழைப்பால் உயர்ந்தவர்கள். அவர்களை ஒரு பயங்கரவாத அமைப்பின் வன்முறைச் செயல்களோடும், தவறுகளோடும் குறுக்கிப் பார்ப்பதும், அந்தத் தவறுகளுக்குத் தொடர்ந்து வக்காலத்து வாங்குவதும் கேவலமான செயலாகும்.
கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வன்முறையை முற்றிலுமாகத் துறந்து, அமைதியான ஜனநாயக வழியில் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான தமிழினப் பற்று.
