கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 08 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைக்கவசம் அணியாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல், இலக்கத் தகடுகள் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் பங்கேற்றனர். கிண்ணியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி W.A.K. சுகத் சந்தனவின் வழிகாட்டலின் கீழ், போக்குவரத்துப் பொறுப்பதிகாரி ஏ.எம். முஸம்மில் தலைமையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் தொடரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
