உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் பிரதான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிரதான சூத்திரதாரி தனக்கான மன்னிப்பு ஏதினையும் கேட்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதியரசர்கள் குழாம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை, அவர்களது தண்டனைக் காலம் தொடங்கும் திகதியில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நிலையில், 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை, பயங்கரவாதச் சதி, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராகப் பதிவு செய்திருந்தார்.
2019 ஏப்ரல் 21 அன்று, இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 260 இற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
