மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மாகாணசபை முறைமை 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்த முறைமைக்கான அரசியலமைப்பு அங்கீகாரமும் அதிகாரங்களும் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதுடன், இரு தரப்பினரும் இணைந்து செயற்படுத்த வேண்டிய அதிகாரங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டன.
மாகாணசபை முறைமை என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசியலமைப்பு ஏற்பாடாகும். அது வெறுமனே நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பல்ல. மாறாக, நாட்டின் பல்லினத் தன்மையை அங்கீகரித்து, அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண மட்டத்திற்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முயற்சியாகும்.
எனவே, மாகாணசபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவாக்க மற்றும் நிர்வாக அதிகாரங்களையும் பாதுகாப்பது என்பது ஒரு தேர்தல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப விவகாரமாக மட்டும் அணுகப்பட முடியாது. அது அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாட்டையும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளையும், இலங்கையின் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பையும் பாதுகாப்பதுடன் தொடர்புடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமை, நடைமுறைப்படுத்தப்படுவதற்குத் தேவையான சட்ட மற்றும் எல்லை நிர்ணயச் சிக்கல்களால் மாகாணசபைத் தேர்தல்களை நீண்டகாலமாக முடக்கி வைத்துள்ளது. இதன் விளைவாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண நிர்வாகங்கள் இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்லாமல், மாகாண மக்களின் அரசியல் பங்கேற்பையும், அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களில் அவர்களுக்குரிய பங்களிப்பையும் பாதிக்கின்றது.
குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், அவர்களின் வாக்குப் பலத்தைச் சிதறடிக்காத மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும். அதேவேளை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான உரிய பிரதிநிதித்துவமும் தேசிய மற்றும் மாகாண சட்டவாக்க அமைப்புகள் இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூகச் சவால்களை வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்கு, மத்திய அரசாங்கத்தின் அதிகாரக் குவிப்பைக் குறைத்து, மாகாணங்களின் பங்கேற்பையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மீளெழுச்சி, புலம்பெயர் மக்களின் முதலீடுகளை ஈர்த்தல், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மாகாண நிர்வாகங்கள் இன்றியமையாதவையாகும்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் தொடர்ந்து ஒத்திவைப்பதன் மூலம் நல்லிணக்கத்தையோ தேசிய ஒருமைப்பாட்டையோ கட்டியெழுப்ப முடியாது. மாறாக, அரசியல மைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும், அனைத்து இன மக்களினதும் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதுமே உண்மையான நல்லிணக்கத்திற்கான அடித்தளமாக அமையும்.
இந்த அடிப்படையில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் பின்வரும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றது:
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதனால் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முடக்கநிலையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2017ஆம் ஆண்டின் திருத்தத்திற்கு முன்னர் நடைமுறையில் இருந்த மாவட்ட அடிப்படை யிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீளமைத்தல்.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி, தேர்தல்களைத் தாமதமின்றி நடத்துவதற்கான கால அட்டவணையை அறிவித்தல்.
பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றம் தேர்தல் முறைமையில் எவ்வாறு ஏற்படுத்தப்படுகின்றதோ அதே முறைமையையே, மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையிலும் கடைப்பிடிக்க பரிந்துரைக்கின்றோம்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் அவற்றின் சட்டவாக்க அந்தஸ்தையும் எவ்விதத்திலும் பலவீனப்படுத்தாமல் பாதுகாத்தல்.
மாகாணசபை தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது. மாகாணசபை ஆட்சி முடிவுற்று இவ்வளவு காலத்திற்குள் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றோ இவ்வளவு காலத்திற்குள் அடுத்த சபை பதவியேற்க வேண்டுமெனவோ சட்டமாக்க தவறிவிட்டமையே காரணமாகும்.
எனவே, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.
மாகாண சபைகள் வலுப்பெறுவது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான வழியாகும். அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கான அடித்தளமாகும். மக்களின் அரசியல் உரிமைகள் மதிக்கப்படுவது இலங்கையின் எதிர்கால ஜனநாயகத்திற்கான உத்தரவாதமாகும் – என்றுள்ளது
