‘குகதா அவர்களின் கவிதைகளில் மறைந்து போன அல்லது மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பழங்கால சொற்பிரயோகங்கள் அதிகம் உலவுகின்றமை நல்லதொரு நினைவு படுத்தல்’ என குலதெய்வம் நூலுக்கான நயப்புரை நிகழ்த்திய தமிழாசிரியரும் எழுத்தாளருமான கனகரட்னம் செந்தூரன் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி வாழ் பெண் படைப்பாளி குகதா என அறியப்பட்ட டக்சனா கிருஷ்ணானந்தன் ஆக்கிய ‘குலதெய்வம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா ஈழத்தின் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள கரைச்சி பிரதேச சபையின் புதிய மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திருகோணமலையில் இயங்கும் ‘அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றம் வெளியீடு செய்த இந்த நூலின் வெளியீட்டு விழாவிற்கு குறித்த மன்றத்தின் நிறுவுநர் கனக.தீபகாந்தன் தலைமை வகித்தார்.
நிகழ்வில் இணை பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தன் அவர்களும் பங்கேற்றனர். நிகழ்வு நாளில் மழையின் பொழிவு இருந்த பொழுதும் நிறைவான இலக்கிய பங்கேற்பாளர்கள் அரங்கை நிறைத்தனர்.
முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
சுடர்கள் ஏற்றப்பட்டன. தமிழ்மொழி வாழ்த்தினை கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் கலைப்பிரியன் இசைத்தார்.
வரவேற்பு நடனத்தினை கிளிநொச்சி தர்ஷன நிவேதனில் நாட்டியாலய மாணவிகள் வழங்கினார்கள். வரவேற்பு உரையினை ஊட்டச்சத்து நிபுணர் பவித்ரா கணேஸ்வரநாதன் வழங்கினார். நிகழ்ச்சிகளை கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் நவநேசன் பிரகாஸ் தொகுத்து வழங்கினார்.
ஆசியுரையினை ஆசிரியர் சி.க.சோதிலிங்கம் வழங்கினார்.
தலைமையுரை நிகழ்த்திய ‘அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை’ கலை இலக்கிய மன்றத்தின் நிறுவுநர் கனக.தீபகாந்தன் அவர்கள் குறிப்பிடும்போது ‘ஓராண்டு இடைவெளிக்குள் இரண்டாவது நூலினை குகதா அவர்கள் வெளிக்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தன்னால் இயன்ற தமிழ்ப்பணியினை இடைவிடாது முன்னெடுப்பதன் அடையாளமே அடுத்த நூல் ஆகும்’ என குறிப்பிட்டார். நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி கவிதை வடிவில் வழங்கினார். சமூகத்தின் அனைத்து பக்கங்களின் பார்வைகளும் குகதாவின் படைப்புகளில் அகப்பட்டு உள்ளன என்றார் அவர்.
நூலினை யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது பிரதியினை திரு திருமதி சோதலிங்கம் யாழினி இணையர் இணைந்து பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூலினை பெற்றுக் கொண்டனர்.
நூலின் நயப்புரையினை எழுத்தாளரும் தமிழாசிரியருமான கனகரட்னம் செந்தூரன் நிகழ்த்தினார். குகதா அவர்கள் ஏற்கனவே வெளியீடு செய்த தாய்மாமன் நூலினையும் இப்பொழுது வெளியீடு செய்யும் குலதெய்வம் நூலினையும் ஒப்பிட்டு அவரின் வளர்ச்சி நிலைகளை சுட்டிக் காட்டினார்.
உரை நிகழ்த்திய கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தன் அவர்கள் இளைய படைப்பாளர்களின் வருகை கிளிநொச்சி மண்ணில் இலக்கிய வளர்ச்சிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விடயம் என்றார்.
நூலகரும் அரச இலக்கிய விருதாளருமான வேல்.லவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது, இன்றைய இளைய படைப்பாளர்கள் ஆழமான கருப்பொருளினை கவிதை ஆக்க வேண்டிய அவசியம் சமூகத்திற்கு தேவையானது என குறிப்பிட்டார்.
உரை நிகழ்த்திய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், ‘எமது வரலாற்றை வாழ்க்கையை இலக்கியங்கள் பேசிய படியினால்தான் முன்னைய காலங்களை மறவாது இருக்கின்றோம். தொடர்ந்து அது பேசப்பட வேண்டும்’ என்றார்.
நூலாசிரியர் குகதா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையினை கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவி சத்தியசீலன் கார்நிலா வழங்கினார்.
இந்த இலக்கிய நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களோடு இளையோரும் பங்கேற்று இருந்தமை இலக்கியம் மீதான நேசத்தை வெளிப்படுத்தியது. ஏற்ற நேரத்தில் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றன.
குலதெய்வம் நூலுக்கான அணிந்துரையினை அரச இலக்கிய விருதாளரும் பொறியியலாளருமான சிவ.ஆரூரன் அவர்கள் எழுத, முகவுரையினை நூலாசிரியர் குகதா எழுதியிருந்தார். வாழ்த்துரையினை ஆசிரியர் சி.க. சோதிலிங்கம் அவர்களும், பதிப்புரையினை வெளியிட்டாளர் சார்பில் கனக.தீபகாந்தன் அவர்களும் எழுதியிருந்தனர்.
Weniger anzeigen
