முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி கட்சியில் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா மீண்டும் விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
சுமார் ஆறு மணி நேரம் கடந்த திங்கட்கிழமை அவர் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தின் துணை ஆயுதக்குழுவாக செயற்பட்ட வேளையில் முன்னெடுக்கப்பட்ட கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தகவல் தீவகப்பகுதிகளில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்த பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றதாக தெரிவிக்கின்றது.
இன்னொரு தகவல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறையிலுள்ள பிள்ளையானிற்கு தற்போது அரச சாட்சியமாகியுள்ள ஆசாத் மௌலானாவை டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தி வைத்தமை தொடர்பிலான விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும் முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி கட்சியில் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தி வரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினரான பொன்னையனும் அதே நாளன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை சந்தேககங்களை வலுப்படுத்தியுள்ளது.
அண்மையில் அரசு பாதுகாப்புக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி ஒன்று குற்றவாளி வலையமைப்புடன் தொடர்புபட்டது என்ற சந்தேகத்தில் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
