அந்த நாடகம்… இந்த மேடையில் இன்னும் எத்தனை நாள்?
மாடுகளைச் சாட்டாக வைத்து காணிப் பறிப்பு – மட்டக்களப்பில் அன்று அரங்கேறிய நாடகம், இன்று திம்புலப்பொத்தானையில் தொடர்கிறது!
“இந்த நாடகம் இன்னும் எத்தனை காலம் தொடரப் போகிறது?”
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இன்று திம்புலப்பொத்தானையில் மாடுகளைச் சாட்டாக வைத்து காணிகளை அபகரிக்கும் முயற்சியாகத் தோன்றும் சம்பவங்களுக்கு நீண்டதொரு வரலாற்றுப் பின்னணி இருப்பதை காண முடிகிறது.
மட்டக்களப்பில்{தற்போது அம்பாறை}அன்று அரங்கேற்றப்பட்ட அதே நாடகம் இன்று புதிய காட்சிகளுடன் தொடர்கிறது. அதன் இறுதி நோக்கம் மட்டக்களப்பில் இருந்து தமிழ் மக்களை அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து படிப்படியாக அகற்றுவதா என்ற அச்சம் இன்று மீண்டும் எழுந்துள்ளது.
வரலாற்றின் முதல் அத்தியாயம்
மட்டக்களப்பின் மேற்குப் பகுதியில் ஓடிய பட்டிப்பளை ஆறு 1951ஆம் ஆண்டு கல்லோயா எனப் பெயர் மாற்றப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில் கல்முனை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது பிரதமராக இருந்த டி.எஸ். சேனாநாயக்காவின் ஆட்சிக் காலத்தில், அரசியல் சூழ்ச்சிகளுடன் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு, தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.
இந்தக் குடியேற்றங்களுக்குள், பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் பயிர்செய்து வந்த பாரம்பரிய உறுதிக் காணிகளும் சிக்கிக்கொண்டன. அவற்றில் சுமார் 25,000 ஏக்கர் நெற்காணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவை வெறும் நெற்காணிகள் அல்ல. அந்த மண்ணில் விளைந்தது நெல் மட்டுமல்ல; பல தலைமுறைகளின் வாழ்வாதாரமும், வரலாறும், உரிமையும் ஆகும்.
மாடுகளைச் சாட்டாக வைத்த அன்றைய காணிப்பறிப்பு
குடியேற்றப் பகுதிகளின் மேடான நிலப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 150 வீடுகள் அமைக்கப்பட்டதுடன், குடியேற்ற மக்களுக்கு ஒருவருக்கு நான்கு ஏக்கர் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டன.
அவற்றை ஒட்டிய பள்ளமான பகுதிகளில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக நெற்செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.
கோணாவளைக் கண்டம் அவற்றில் முக்கியமானது. சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளமான நிலப்பகுதி, துறைநீலாவணை மக்களின் உறுதிக் காணிகளாக இருந்தது.
அதற்கு அருகிலிருந்த 32ஆம் கிராமம் பின்னர் ரஜகலதென்ன என அழைக்கப்பட்டது.
அங்கிருந்த சில குடியேற்ற விவசாயிகளின் கால்நடைகள் தமிழ் மக்களின் வயல்களுக்குள் விடப்பட்ட நிலையில் அவற்றை தமிழ் விவசாயிகள் பிடித்துக் கட்டியபோது ஆயுதங்களுடன் வந்த சிங்கள இனவாத குழுக்கள் தமிழ் மக்களைத் தாக்கி, அவர்களது மாடுகளை மீட்டுச் சென்றதாகவும் அந்தக் காலத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் உகனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும், முறைப்பாடு செய்தவர்களே கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு, சில நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தொடர்ந்த அழுத்தம் காரணமாக, தமது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த காணிகளை தமிழ் மக்கள் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
1962 முதல் ஆரம்பித்த காணி விற்பனை
1962ஆம் ஆண்டு தொடங்கி, ஒரு ஏக்கர் சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
துறைநீலாவணை கண்ணகியம்மன் கோயில் வண்ணக்கர் சபாபதிப்பிள்ளை, தமக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியையும் 1965ஆம் ஆண்டு விற்றார்.
இவ்வாறு சுமார் 600 ஏக்கர் காணிகளும் படிப்படியாக கைமாறப்பட்டது.
மானுரிச்சக்கல், மாக்காண்டி, புளியங்குளத்து முன்மாரி, கல்லாத்தார் வட்டை, பறங்கியர் வட்டை, கோம்பானை, கோமாரி, வளலகல்லு, வண்டரத்தீவு போன்ற பல பகுதிகளிலும் இதுபோன்ற காணி இழப்புகள் இடம்பெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு இலட்சம் ஏக்கர் காடு – 25,000 ஏக்கர் தமிழ் நெற்காணிகள்
காடுகள் அழிக்கப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு குடியேற்றத்திற்காக மாற்றப்பட்டதுடன், சுமார் 25,000 ஏக்கர் தமிழ் மக்களின் பாரம்பரிய நெற்காணிகளும் இந்தச் செயல்முறையில் பறிபோனது.
இதன் அரசியல் விளைவாக, அம்பாறை மாவட்டத்தில் புதிய சிங்கள குடியேற்ற அரசியல் கட்டமைப்புகள் உருவாகி, மக்கள் தொகை அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
அன்று மாடுகளைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களின் வயல்களுக்குள் நுழைந்த காட்சிகள், இன்று வேறு வடிவத்தில் மீண்டும் அரங்கேறுவதாகவே மட்டக்களப்பு மக்கள் பார்க்கின்றனர்.
இன்று திம்புலப்பொத்தானையில் அதே நாடகமா?
இன்று திம்புலப்பொத்தானை பகுதியில் மாடுகளைச் சுடுதல், கால்நடைகளைச் சுற்றிய பிரச்சினைகளை உருவாக்குதல், மேய்ச்சல் நிலங்களைப் பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இதனை வெறும் கால்நடைப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது.
மக்களின் நிலம், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமை, குடியேற்றம் ஆகிய அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இதனை அணுக வேண்டும்.
“மாடுகளைச் சாட்டாக வைத்து காணி பிடிப்பது” என்ற பழைய உத்தி, இன்று புதிய வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு அரசாங்கம் வெளிப்படையான பதிலை வழங்க வேண்டும்.
60 ஆண்டுகளாக சொந்தக் காணிக்குள் செல்ல முடியாத குடும்பம்ங்கள்.
எங்களுக்குரிய பறங்கியர் வட்டை காணியும் இந்த வரலாற்றின் ஒரு சாட்சியாகும்.
தகவல் வழங்கிய முன்னாள் அதிபர் தங்கராசா அவர்களின் கூற்றுப்படி, அவர் தனது குடும்பத்துக்குரிய காணிக்குள் கடைசியாகச் சென்றது 1965ஆம் ஆண்டு மே மாதம்.
அதன் பின்னர் சுமார் 60 ஆண்டுகளாக அந்தக் காணிக்குள் மீண்டும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தனது சொந்தக் காணிக்குள் 60 ஆண்டுகளாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்குமானால், அது வெறும் காணிப் பிரச்சினை அல்ல.கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியான செயற்பாடாகும்.அதையே தற்போதைய அரசும் செயற்படுத்தி வருகின்றது.
அது ஒரு இனத்தின் வரலாறு, உரிமை, வாழ்வாதாரம் மற்றும் இருப்பு தொடர்பான பிரச்சினையாகும்.
அந்த நாடகம் இன்னும் எத்தனை நாள்?
அன்று பட்டிப்பளை – கல்லோயா பகுதியில் அரங்கேற்றப்பட்ட நாடகம், இன்று திம்புலப்பொத்தானை என்ற பெயருடன் மகாவலி B வலயமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மக்களின் பாரம்பரிய காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய நில உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மாடுகளைச் சாட்டாக வைத்து காணி அபகரிக்கும் எந்த முயற்சியும் நிறுத்தப்பட வேண்டும்.
வரலாற்று ஆவணங்கள், உறுதிகள், காணி பதிவுகள் மற்றும் மக்களின் சாட்சிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இது வெறும் மாடு மேய்க்கும் பிரச்சினையல்ல.
இது நிலத்திற்கான போராட்டம்.
இது வாழ்வாதாரத்திற்கான போராட்டம்.
இது வரலாற்றையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம்.
“அந்த நாடகம்… இந்த மேடையில் எத்தனை நாளம்மா?
இன்னும் எத்தனை நாளம்மா?
தமிழரின் நிலத்திலிருந்து தமிழரை வெளியேற்றும் இந்த நாடகம் இனியும் தொடரக்கூடாது! என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
