மயிலத்தமடு–மாதவணையில் மீண்டும் பதற்றம்!
கால்நடைப் பண்ணையாளர் கந்தப்பு யோகலிங்கத்தை பொலிஸார் அழைத்துச் சென்றது ஏன்?
கால்நடைப் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் துணைபோகிறார்களா?
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் பதற்றங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இன்று கால்நடைப் பண்ணையாளர் கந்தப்பு யோகலிங்கம் என்பவரை மயிலத்தமடு பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ள நிலையில், இதுவரை அவர் விடுவிக்கப்படாதது கால்நடைப் பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கால்நடைகளை விரட்டச் சென்ற பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தல்!
இன்று மதியமளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும், சில கால்நடைகள் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் விவசாய நிலங்களுக்கு அருகாமையில் நிற்பதாகவும், அவற்றைப் பண்ணையாளர்கள் சென்று விரட்டிவிடுமாறும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய கால்நடைகளை விரட்டச் சென்ற பண்ணையாளர்களை, அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் சில சிங்களவர்கள் மண்வெட்டிகள் மற்றும் தடிகளைக் கையில் ஏந்தியவாறு தாக்கும் நோக்கத்துடன் வேகமாக ஓடி வந்ததாகவும், உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பண்ணையாளர்கள் அங்கிருந்து திரும்பி ஓடிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கால்நடைகளை விரட்டச் செல்லுமாறு பொலிஸாரே கூறிய நிலையில், பண்ணையாளர்களைத் தாக்குவதற்கு முயற்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
பண்ணையாளர் கந்தப்பு யோகலிங்கம் எங்கே?
இந்தச் சம்பவத்தின் பின்னர், மயிலத்தமடு பொலிஸ் காவலரணைச் சேர்ந்த பொலிஸார் கந்தப்பு யோகலிங்கம் என்பவரை விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் அழைத்துச் செல்லப்பட்டு பல மணி நேரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனப் பண்ணையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அவரைத் தேடிச் செல்வதற்கும், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பார்ப்பதற்கும் ஏனைய பண்ணையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாக்குவதற்காக மண்வெட்டிகளையும் தடிகளையும் ஏந்தி வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? அல்லது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் கால்நடைப் பண்ணையாளர்களே பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்களா?
கடத்தல்காரர்களுக்கு எதிராகச் சென்றவர்களே வழக்குகளில் சிக்குகின்றனர்!
கடந்த வாரம் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட சிலரால் கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கடத்தப்பட்ட பண்ணையாளரைத் தேடிச் சென்றவர்கள் மீது கரடியனாறு பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், கடத்தப்பட்டவரைத் தேடிச் சென்றவர்கள் வழக்குகளில் சிக்குவதும், தற்போது விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட பண்ணையாளரைப் பார்ப்பதற்குக்கூட ஏனையவர்கள் அச்சப்படுவதும் மயிலத்தமடு–மாதவணையில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சமான நிலைமையை வெளிப்படுத்துகின்றது.
தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது யார்?
மயிலத்தமடு–மாதவணை மேய்ச்சல் தரை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலையில், கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றது.
கால்நடைகள் மீதான தாக்குதல்கள், பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், கடத்தல் சம்பவங்கள், பொலிஸ் நடவடிக்கைகள் எனத் தொடரும் இந்தச் சூழ்நிலையானது, தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்புகின்றது.
ஒருபுறம் கால்நடைப் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; மறுபுறம் அவர்களுக்காகச் செயற்படுபவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலைமையில் கால்நடைப் பண்ணையாளர்கள் எவ்வாறு தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை வளர்ப்பது?
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கந்தப்பு யோகலிங்கம் தொடர்பில் பொலிஸார் உடனடியாகத் தெளிவான தகவல்களை வழங்க வேண்டும். அவர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும். சட்டரீதியான தடுப்பு ஏதுமில்லாவிட்டால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அத்துடன், கால்நடைப் பண்ணையாளர்களை அச்சுறுத்தியவர்கள் மற்றும் தாக்குவதற்கு முயற்சித்தவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மயிலத்தமடு–மாதவணை கால்நடைப் பண்ணையாளர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவதையும், அவர்களை அச்சத்தின் கீழ் வாழச் செய்வதையும் இனியும் அனுமதிக்க முடியாது!
மேற்படிச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கவலையையும் கண்டணத்தையும் தெரிவித்துள்ளது.
