சவூதி அரேபியாவில் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு, பெரும் கனவுகளுடன் இலங்கை திரும்பிய 33 வயதுடைய தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த பெண், கடந்த நவம்பர் 4ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார்.
சவூதியில் தன்னுடன் பணியாற்றிய தோழி ஒருவரின் பொதியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பில் இருந்து வாடகை வாகனத்தில் வந்துள்ளார்.
முல்லைத்தீவு வந்த பின், பொதியை ஒப்படைத்துவிட்டு மீண்டும் அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்தபோது, புதுக்குடியிருப்பு நகருக்கு அருகிலுள்ள பகுதியில் சாரதி மேலும் இரு ஆண்களை வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
அவர்கள் வழங்கிய பானத்தை அருந்திய சில நிமிடங்களில் பெண் மயக்கமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மயக்கமடைந்த பெண்ணை ஆள்நடமாட்டமற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று குழுவாகப் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரிடமிருந்த சுமார் 13 இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற வீதியில் மயங்கிய நிலையில் காணப்பட்ட பெண்ணை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து 1990 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்ட வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
”வெளிநாட்டில் உழைத்துவிட்டு தாயகம் திரும்பும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அறிமுகமில்லாதவர்களின் வாகனங்களில் பயணிப்பதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் இச்சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது”
”இந்த ஒரு செய்தியை ஏனையவர்களுக்கும் பகிருங்கள், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெண்கள் தனியாக அறிமுகம் இல்லாதவர்கள் உடன் பயணிப்பதை முற்று முழுதாக தவிருங்கள்’
