அனிருத்தன் வந்திடுவார் என்றாலே ஆயிரம் யூரோவும் தூசாம்,
அரங்கத்தில் இடம்பிடிக்க அலைமோதும் ஆர்வம் வீசும்!
இளையராஜா இசை என்றால் இரவெல்லாம் விழித்திருப்பார்,
இனத்தின் மாவீரர் நினைவென்றால் ஏனோ முகம் சுளிப்பார்!
சினிமாவைக் காண்பதற்குச் சிறகடித்துப் பறப்பார்,
சில்லறை செலவென்றாலும் சிரித்தபடி கொடுப்பார்!
மாவீரர் நாள் வந்துவிட்டால் மனக்கணக்கைப் பார்ப்பார்,
மாத விடுப்பு இல்லையென்று மடமடவென்று சொல்வார்!
வீட்டுக்காரி விரும்பவில்லை, வீட்டில் யாரும் சம்மதமில்லை,
மூத்தவருக்கும் பிடிக்கவில்லை, சின்னவர்க்கும் விருப்பமில்லை!
ஒருநாளை ஒதுக்குவதற்கோ உலகமெல்லாம் தடையாகும்,
ஒரு கச்சேரி என்றவுடன் உறக்கம்கூட விடையாகும்!
வீட்டு விழாக் நிகழ்விலே ஈழ எழுச்சிப் பாடல் வந்தால்,
வீணாக ஏன் பாடுகிறாய்? இயக்க நிகழ்வா? என்பார்!
இசையில்கூட இன உணர்வு இங்கே ஒலிக்கக் கூடாதாம்,
இனத்தின் வலியைப் பேசினால் – சில
இல்லத்திலே இடமில்லையாம்!
கேளிக்கைக்குக் காசுமுண்டு, கொண்டாட்ட நேரமுண்டு,
கலைஞர்களைக் காண்பதற்குக் கடல் தாண்டும் துணிவுமுண்டு!
காவியமாய் உயிர்கொடுத்தோர் நினைவுகூர நேரமில்லை,
காரணங்கள் ஆயிரமுண்டு; நன்றியுணர்வு மட்டும் இல்லையா?
விஜய் அயல்நாடு வருகிறார் என்றாலே அகமெல்லாம் பெருமிதமாம்,
அன்னை மண்ணின் வரலாறு பேசினாலோ கசப்புமாம்!
வசதியான வாழ்வென்று வானளாவப் பறந்தாலும்,
வேரிழந்த மரம்போலே விழுதெங்கே முளைத்திடுமோ?
உயிரைக் கொடுத்த வீரரெல்லாம் உறவில்லாதவர்களா?
உதிரத்தால் வரலாறு எழுதியவர் அயலானவர்களா?
நாம் இன்று நிமிர்ந்து நிற்க நெருப்பாகி வீழ்ந்தவர்கள்,
நாளை வரும் தலைமுறைக்குத் நம்பிக்கையை விதைத்தவர்கள்!
கேளிக்கைகள் தொடரட்டுமே, கொண்டாட்டம் நடக்கட்டுமே,
கலைஞர்களின் கலைவாழ்வு காலமெல்லாம் வளரட்டுமே!
காவியத் தியாகம் மட்டும் காலத்தோடு மறையாதே,
கண்மணியாய் காத்த வரலாறு காற்றோடு கரையாதே!
வசதிக்காக வேர்களை விற்றுவிட வேண்டாமே,
வாழ்வுக்காக வரலாற்றை மறந்துவிட வேண்டாமே!
வீரம் விதைத்த மண்ணினிலே விழிப்புணர்வு மலரட்டும்,
வேர்களைத் தாங்கும் இளந்தலைமுறை வீறுகொண்டு எழட்டும்!
நினைவுகொள்வோம்! நெஞ்சில் சுமப்போம்!
நிகழ்ந்த வரலாற்றைத் தலைமுறைக்குக் கொடுப்போம்!
நன்றியுணர்வோடு நம் வேர்களைக் காப்போம்!
நம் இனத்தின் வரலாற்றை என்றும் வாழவைப்போம்!
🤕😰✍️ கரவையூரான்
