இலங்கைத் தழிழ் மக்களின் போக்குவரத்து ராசா
போக்குவரத்துச் சாதனங்களில் தமிழர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து தரை வழிப் போக்குவரத்துச் சாதனம் தட்டி வான் ஆகும்
எத்தனை நபர்களுக்கு தட்டிவான் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது
இந்தத் தட்டிவான் என்பது ஒரு பிரித்தானியத் தயாரிப்பாகும். ஒரு லொறி போல அளவில் கொஞ்சம் சிறியதாக இருக்கும். முன்பாகம் ஒரு பழைய காலத்து காராக இருக்கும். பின்பாகம் ஒரு லொறியின் பெட்டி போல இரும்புச் சட்டத்தில் மரப் பலகைகளைப் பிணைத்து தட்டி வான் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தட்டி வானில் கண்ணாடி ஜன்னல் எதுவும் இருக்காது. கதவில்லாத ஜன்னலாக இரும்புச் சட்டத்தின் மேல் மரப் பலகைகளைப் பிணைத்து தட்டி வான் தயாரிக்கப்பட்டிருக்கும். நீளமான மரக் கதிரை இருக்கைகளும் அதில் காணப்படும்.
சாரதியின் கைக்கு எதிராக வெளிப்புறமாக பொருத்தப்பட்ட குழாய் ஹோர்னின் ‘பாப்’ ‘பாப்’ என்ற சத்தமும் என்றும் மறக்க முடியாத நினைவுகளாகவே தட்டி வானில் பயணம் செய்தவர்களுக்கு இருக்கும். இந்த தட்டி வானில் இட நெருக்கடி எப்போதும் காணப்படும். அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் போன்றோர் உள்ளே அமர்ந்திருக்க பின்பக்கம் இருக்கும் அரைக் கதவைத் திறந்து விட்டு அதனை சங்கிலியால் பிணைத்திருப்பர். அந்தப் பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் பயணிப்பார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டு நிற்பதற்கு வசதியாக கயிறும் இணைக்கப்பட்டிருக்கும்.
பல மாணவர்கள் பின் பக்கம் இருக்கும் பலகை மேல் நின்று செல்லவது வழக்கம் அப்படி நின்று செல்பவர்களில் சிலர் தட்டிவான் வேகம் குறைத்து தரிப்பு இடத்தை அடைவதற்க்கு முன்னர் பணம் கொடுக்காது இறங்கி ஓடிவிடுவார்கள் அதில் இதை வாசிக்கும் நீங்களாக கூட இருக்கலாம்.
தட்டி வான் பயணம் தொடர்பான ஒரு பகிடிக் கதையொன்று சொல்வார்கள். ஒரு தடவை ஓர் ஆச்சி கடகப் பெட்டியோடு இந்த வானில் ஏறிக் கொண்டாராம். முன்னிருக்கையில் அமர்ந்தவாறு கடகப் பெட்டியை கியர் பெட்டிக்கு மேலாக வைத்து விட்டாராம். வண்டி சென்று கொண்டிருக்கும் போது சாரதி ‘அனே ஆச்சி கியர் போடனும் உந்த கடகத்தைக் கொஞ்சம் எடு’ என்றாராம். உடனே ஆச்சியும் சர்வ சாதாரணமாக ‘அத உந்த கடகத்துக்க போடன்’ என்றாராம். எனவே இந்த வகையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தட்டி வானில் பயணித்தோருக்கு அழியா நினைவுகளாக இருக்கும்.
இன்றைய காலத்தில் உள்ள பேரூந்துகளில் பெரிய பெரிய மூடைகளோடு ஏறினால் உடனே சினந்து கொள்ளும் பேரூந்து நடத்துனர்கள் மத்தியில் இந்த தட்டி வானில் பயணம் செய்யும் போது பல விவசாய உற்பத்தி பொருட்கள் மீன் பொட்டிகள் ஏற்றிக் கொண்டு மக்கள் மிகவும் சாவகாசமாகவும் பயணம் செய்துள்ளனர். ‘ஒருதலை ராகம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘உயிர் உள்ளவரை ‘, ‘பயணங்கள் முடிவதில்லை’போன்ற பட பாடல்கள் ஒலிக்கையில் பயணங்களில் சிந்தனையை சிதற விடுமளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அன்றைய நாட்கள்.
1970களில் பருத்தித் துறையிலிருந்து யாழ்ப்பாணம், மானிப்பாய் அச்சுவேலி,நெல்லியடி,கொடிகாமம்,பூநகரி,பரந்தன், உடையார்கட்டு போன்ற பல பிரதேசங்களுக்கொல்லாம் இந்த தட்டி வானின் சேவை அளப்பெரியதாகவிருந்தது. பருத்தித்துறை,கொடிகாமம், நெல்லியடி,அச்சுவேலி போன்ற இடங்களில் தட்டி வான் கூடுதலான பங்களிப்பைச் செய்துள்ளது.
அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாணம் மூளாய் போன்ற இடங்களுக்கும் பயணித்தவை
எப்படியும் காலை 7 மணிக்கு அச்சுவேலி,நெல்லியடி பருத்தித்துறை சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் நடத்துனர் விடமாட்டார் அண்ணே அக்கா இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரை மணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பார்
தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் தொண்டைமானாறில் இருந்து பருத்தித்துறை,நெல்லியடி,அச்சுவேலி ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள்.
தற்போது அதி நவீன வசதிகளுடன் காணப்படுகின்ற பல வாகனங்களில் கூட காற்றோட்ட வசதியென்பது சற்றுக் குறைவாகத் தானிருக்கின்றது. ஆனால் இந்தத் தட்டி வானில் பயணிக்கும் போது காற்று மிகத் தாராளமாகவே வந்து போகும். அன்றைய காலங்களில் திறந்த வெளிகளைக் கொண்ட இந்த தட்டி வானைப் பலரும் விரும்பினார்கள். மங்கல,அமங்கல நிகழ்வுகளுக்குக் கூட தட்டி வான் தான் பெருமளவிற்கு மக்களை ஏற்றிச் செல்லும். கோவில் திருவிழாக்களுக்கு குறிப்பாக வற்றாப்பழை கண்ணகையம்மன் கோவிலுக்கு தட்டி வானில் களைகட்டிய பக்தர்கள் சென்று வந்த காலங்கள் பசுமையானவையாகும்.
இந்த தட்டிவானில் அடிக்கும் கோர்ன் சத்தம் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமின்றி வேலைக்குச் செல்பவர்கள் என அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை ஒலியாகவே இது காணப்படும். பொதுவாக சந்தைக்கு காய் கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார் தான் பெரும்பாண்மையான பயணிகளாக இருப்பார்கள். நடத்துனரின் ‘ரைட் ரைட்’ சத்தம் கேட்குதோ இல்லையோ ‘கெதியா ஏறணை ஆச்சி’, ‘அந்தக் கடகப் பெட்டியை தள்ளி வையுங்கோ அம்மா’ என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை. பெரிய சத்தத்தோடான பாடல்கள்,காதைக் கிழிக்கும் கோன் சத்தம்,காற்றோட்டமான பயணம் என எதையும் மறக்க முடியாத அளவிற்கு இந்த தட்டி வான் பயணம் இனிமையானதாகவே அந்தக் காலங்களில் அமைந்திருந்தன.
கிறீச் கிறீச் என்ற பிணைச்சல்கள் பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவது போல சத்தத்தோடு அசைந்து கொண்டு செம் மண் புழுதியையும் தரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்கமுடியாதவை!
2000 ஆண்டுகளுக்குப் பின்னர் மினி பஸ்களின் (பேரூந்துகளின்) வருகையினாலும் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வாகனங்களின் வருகையினாலும் தட்டி வான் பயணங்களின் பண்பாடு மெல்ல மெல்ல அருகிச் சென்று இன்று இல்லாமலேயே போய் விட்டது.
வட மாகணத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் தட்டிவான் இருந்ததா என்று தெரியவில்லை.