ஐயகோ! கைப்பேசி இன்று
தொல்லைபேசி ஆகியது ஏன்?
பொதுவெளியில் பேசுவது தெரியாமல்
பொல்லாத விடயங்களை எல்லாம் பேசி
ஈழ இனத்தின் மானத்தைக் கூறுபோடும்
நிலை பார்த்துத் கொதிக்கிறது இரத்தம்!
கதைக்க ஏதுமில்லை என்று குழுக்குழுவாய்
முகநூலிலும் (Facebook) ‘டிக்டாக்கிலும்’ (TikTok)
கழுதைகள் கூட கதைக்காத கதையை
தாறுமாறாகக் கதைக்க ஒரு கூட்டம்!
இழிவான வார்த்தைகள் பேசிடும் இவர்கள்
வீடுகளிலும் தங்கள் பிள்ளைகளிடமும்
இதுபோலத்தான் நடக்கின்றார்களா?
பொதுவெளிக்கென நாகரிகம் புரியாத
பித்தர்களா இவர்கள்?
அரியாசனம் கிடைத்துவிட்டது என்பதற்காக
அதில் மலம் கழிக்க முடியுமா?
மூடிய முகத்திரையுடன் பேடிகளாய் நின்று
தாயை, தாய் மண்ணை, தன் இனத்தை,
தமிழ் ஈழ வீரர்களை, தங்களைச் தியாகம் செய்யச் சென்ற தங்கைகளை,
தலைவனை, தளபதிகளை மட்டுமல்ல
தன்னுடன் களம் நின்றோரையும் தூற்றும்
தாய்மண் துரோகிகளாகி விட்டீர்கள் என்பதை உணருங்கள்!
பார்ப்பவரும் கேட்பவரும் உங்களைக் காறித் துப்புகின்றார்கள்.
பயந்து வாழ்ந்த உங்கள் வாழ்க்கை வெளிநாட்டுப் பயணத்தால் மாறிவிட்டதா?
பணம் வந்துவிட்டதால் குணம் மாறிவிட்டதா?
நம் இனத்து விடிவுக்காய் நால்வர் அல்ல… நாற்பது பேர் அல்ல… நாலாயிரம் பேரை இணைத்து
எமது வாழ்வின் நிலை அறிந்து சுதந்திரம் தேடாமல்
நரம்பு “இல்லாத” நாவால் நளினம் உரைப்பதனால்
எதைக்கண்டு கொள்ளப்போகின்றீர்கள்?
உன் கைப்பேசி எம் இனமானத்தை விலைப் பேச நீயே காரணம் என்பதை உணர்வாயா தமிழா?
ஈழ தமிழன்
