ஒறேற்றர் சுப்பிரமணியம் (சீ. சுப்பிரமணியம்) என்பவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற கல்விமான், சிறந்த அதிபர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி, அக்கல்லூரியைப் பெரும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு
அக்டோபர் 18, 1902 அன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் – கட்டுடை என்ற கிராமத்தில் பிறந்தார்.
பெயர்க் காரணம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவர் படித்துக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் வராத ஒரு மாணவர் மன்றக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் மிகச் சிறந்த முறையில் உரையாற்றினார். இவரது ஆங்கிலப் பேச்சாற்றலைக் கண்டு வியந்த அப்போதைய அதிபர் நெவின்ஸ் செல்லத்துரை, “இவன் ஒரு ஒறேற்றர் (Orator – சிறந்த சொற்பொழிவாளர்) எடா” என்று பாராட்டினார். அன்றிலிருந்து இவரது பெயருடன் ‘ஒறேற்றர்’ என்ற அடைமொழி இணைந்து கொண்டது.
தொடக்கத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். பாடசாலையின் கல்வித் தரத்தை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார். இவரது காலத்தில் ஒரே தடவையில் 50 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்தனர்
1920-களில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) அமைப்பை உருவாக்குவதில் ஹன்டி பேரின்பநாயகம் போன்றோருடன் இணைந்து முக்கிய பங்காற்றினார்.
(எனது ஹன்டி பேரின்பநாயகம்த்தின் பதிவை வாசிக்கவும் )
சாத்திய வெறி பிடித்தகாலத்தில் சாத்திய வெறிக்கு எதிராகப் போர் தொடுத்தவர்
இந்தியக் கண்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு மாற்றமும் சேய் நாடான இலங்கையிலும் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட சுதந்திர தாகம் யாழ்ப்பாண மாணவரிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1920 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஹண்டி பேரின்ப நாயகம் தலைமையில் ஆரம்பமானது.இவருடன் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் ஒரேற்றர் சுப்பிரமணியம், செனட்டர் பி.நாகலிங்கம், செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம், அட்வகேட் பாலசுந்தரம், பேராசிரியர் சுந்தரலிங்கம், பேராசிரியர் நேசையா, செனட்டர் சுப்பையா, நடேச பிள்ளை ஆகியோராவர் (அக்கால கூட்டத்தில் இவர்கள் மாணவர்கள்)
மகாத்மா காந்தியின் வரவேற்புக்கு மேற்கூறப்பட்டவர்களுடன் யாழ்ப்பாண மக்கள் இன, மத வேறுபாடின்றி ஒத்துழைத்து மகாத்மா காந்தியை வரவேற்றனர். இவற்றைவிட சர். பொன்.இராமநாதன் (HINDU BOARD) இராஜரத்தினம் போன்றோரும் மகாத்மா காந்தியை இராமநாதன் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெரிய வரவேற்பும் நடந்தது. காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தபோது அவரைக் கௌரவிக்க மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. காந்தி சென்ற இடமெல்லாம் சிறப்பான வரவேற்புகள் வழங்கப்பட்டன.மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸார், சுதேசி கொள்கையைப் பின்பற்றி அந்நியப் பொருட்களைப் புறக்கணித்து கதர் ஆடையை அணிந்தனர். ஹண்டி பேரின்பநாயகம், சுப்பிரமணியம், கனகநாயகம், நேசையா மற்றும் செனட்டர் பி. நாகலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையையே அணிந்தனர்
சிறு குறிப்பு
%%%%%%%%%%
1920-ல் எஸ்.எச்.கன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் ஆகியோர் வாலிபர் காங்கிரஸின் ஸ்தாபகர்கள் ஆகின்றனர். இவர்களோடு எஸ்.சிவபாதசுந்தரம் போன்ற முற்போக்கு சமூக நல்லெண்ணம் கொண்ட பல இளைஞர்களும் வாலிபர் காங்கிரஸில் இணைகின்றார்கள்.
1924-ல் நடைபெற்ற மாநாட்டின் பத்துத் தீர்மானங்களில் மூன்றாவது முக்கிய தீர்மானம். தமிழர் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சாதி-தீண்டாமைக்கு எதிரான கண்டனக்குரலாகும். இதை இல்லாது ஒழிப்பதற்கு வாலிபர் காங்கிரஸ் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமெனவும் அம்மாநாடு தீர்மானித்தது.
இக்காலகட்டத்தில் காங்கிரஸை நோக்கி “உங்களால் ஓடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் உணவருந்த முடியுமா” என சாதித்திமிர் கொண்டவர்களால் சவால் விடப்பட்டது. இதையேற்று வாலிபர் காங்கிரஸின் கன்டி பேரின்பநாயகம் உட்பட்ட முக்கிய தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளில் உணவருந்தி அச்சவாலை முறியடித்தனர்.
1927-ல் காந்தி இலங்கைக்கு வருகை தந்தார். அச்சமயம் அவரை யாழப்பாணத்திற்கு வாலிபர் காங்கிரஸ் அழைத்திருந்தது. யாழின் பல இடங்களில் அவருக்கான கூட்டங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டது. காந்தியின் யாழ்-வருகைக்கு முன்பாக, யாழின் பல இடங்களில் வாலிபர் காங்கிரஸால் பல தயாரிப்புக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இதில் ஓடுக்கப்பட்ட சமூகப்பிரதிநிதிகளும் பங்கெடுத்தனர். சில இடங்களில் இதைப் பொறுக்காத சாதிமான்கள் அவர்களின் பங்கெடுப்பின்றித் தாங்கள் “தனித்தமிழர்களாக” காந்திக்கு வரவேற்புக் கொடுக்கப் போகின்றோம் என வாதிட்டனர்.
வடமராட்சி துன்னாலையில் நடைபெற்றதோர் தயாரிப்புக் கூட்டத்தில் ஓடுக்கப்பட்ட மக்களின் பங்குபற்றல் பற்றிய வாதப்பிரதிவாதங்களில், காந்தியை வரவேற்பதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவம் வழங்காது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் காந்தியை அழைத்து அவருக்கு கௌரவம்
வழங்குவதில எந்தவித அர்த்தமும் இல்லையெனக் கூறி சாதிமான்களின் கோரிக்கையை வாலிபர் காங்கிரஸ் தலைவர்கள் முற்றாக நிராகரித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறியர்கள், தெல்லிப்பழையில் காந்தியை வரவேற்பதற்கென அமைத்த வரவேற்புப் பந்தலை தீயிட்டு கொழுத்தி நாசப்படுத்தினர்.
இவ்வெதிர்ப்புக்கும் மத்தியில் 26-11-1927-அன்று யாழ் முற்றவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தி கலந்துகொண்டார். அக்கூட்ட மேடையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் சமமாக பங்கெடுத்தனர்
இதையடுத்து 1929-ல் வாலிபர் காங்கிரஸின் 5-வது மாநாடு அன்று தமிழகத்தில் இருந்து விசேட பிரதிநிதியாக வருகை தந்திருந்த “’தமிழ்த்தென்றல்’ வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமையில் காங்கேசன்துறையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சம ஆசனம், சம போசனம் என்ற வாலிபர் காங்கிரஸின் உறுதியான கோட்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதை அன்றைய டெயிலி நியூஸ் பத்திரிகை “யாழ்ப்பாணத்தில் காங்கிரஸின் புரட்சிகர நடவடிக்கை” என எழுதியிருந்தது. இம்மாநாட்டிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னேடியான யோவல் போல் அவர்களும் வாலிபர் காங்கிரஸின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவருடன் இவருடைய இறுதிக் காலத்தில் அவரின் மனக் குமுறலை அவரின் பாணியில் கேட்போம் வாருங்கள்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“1924இல் தான் நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து முதற் கூட்டம் வைத்தோம். அதற்கு முன்னர், 21-22ல் நான் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். சென்றற் நாகலிங்கம் என்றொருவர் இருந்தவர் தெரியுமா? – அவர் பரமேஸ்வராக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியுடன் எங்களுக்கு அந்த நேரத்தில் அவ்வளவு தொடர்பு இல்லை. நாகலிங்கமும் நானும் இஷ்டமான சிநேகிதம். தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குப் பின்புறமாக இருக்கும் அவரது வீட்டில் – பொன்னர் வளவில் – அடிக்கடி சந்திப்போம். அவரது தாயார் நல்ல விருந்தோம்பி. அப்போது நானும் நாகலிங்கமும் இது பற்றி யோசித்திருக்கிறோம்.பின்னர் 1924இல் நான் இன்ரர்ஆட்ஸ் (Inter-Arts) படிப்பதற்காக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதுதான் ஹன்டி மாஸ்டர் (ஹன்டி பேரினபநாயகம்) B.A. எடுத்துவிட்டு அங்கு வந்திருக்கிறார். அவ் வேளையில்தான் இதுபற்றித் தீவிரமாக யோசித்தோம்.”அதற்கு முன்னர் Y.M.H.A. (Young Men’s Hindu Association) என்று கீரிமலையில் ஒரு சங்கம் தீவிரமாக நடந்து வந்தது. M.S. இளையதம்பி, V.முத்துக்குமாரு, சேர் பொன். இராமநாதன் போன்றவர்கள் அதில் கூடி இந்துமதம் பற்றிக் கூட்டம் நடத்துவார்கள். நாங்கள் சகல மதத்தினரும் கூடி தங்களது அரசியல், கல்விப் பிரச்சனைகள், சமூக விஷயங்கள் பற்றிக் கதைப்பதற்கும் அவற்றைத் தீர்ப்பதில் இணைந்து பங்காற்றவும் கூடிய ஒரு சங்கத்தை உருவாக்கினோம். அதுதான் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ். யாழ்ப்பாணத்தில் பின்னர் நகர மண்டபம் (Town Hall) என அழைக்கப்பட்ட ‘றிட்ஜ்வே’ மண்டபத்தில்தான் கூட்டம் கூடுவோம். அரசியற் சுதந்திரம், கல்வி, தாய்மொழிக் கொள்கை, சாதிப் பாகுபாட்டிற்கு எதிர்ப்பு இவைதான் எமது கொள்கைகளாக இருந்தது. இந்த யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸே பின்னர் ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ (Jaffna Youth Congress) ஆக மாறியது.இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இடங்களில் எங்களுடைய கூட்டங்களைக் கூட்டிக்கொண்டு வந்தோம். அந்தக் காலத்தில் சமபந்தி, சம ஆசனமே மிக முக்கிய சமூகப் பிரச்சனையாக இருந்தது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்களை அப்போது சமனாக வாங்குகளில் இருக்க விடுவதில்லை. சமபோசனமில்லை. அவர்களைத் ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்றுதான் அழைப்பது. பின்னர்தான் மரியாதையாக்கி ‘சிறுபான்மைத் தமிழர்’ என்று அழைக்கப்பட்டார்கள். தமிழ்ப் பள்ளிக்கூடங்களில்தான் இந்த நிலையென்றால் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் துண்டாக அனுமதி கிடையாது.
1925க்கு முந்தி, முதன்முதல் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவனை, அன்றைய அதிபரான ஜோன் பிக்னெல் பாதிரியார் (Rev. John Bicknell) சேர்த்துக் கொண்டார். உடனடியாகவே அந்த வகுப்பிலிருந்த சகல மாணவர்களும் வகுப்பைவிட்டு வெளியேறி விட்டனர். ஆசிரியர்களும் பாடமெடுக்க மறுத்து விட்டனர். ஆனால் பிக்னெல் பாதிரியார் ஒரு மாணவன் இருந்தாலும் வகுப்பை நடத்துவேன் எனக் கூறிவிட்டார். அவரின் அந்த நடவடிக்கையின்போது ஹன்டி மாஸ்டரும் அவருக்கு ஆதரவாக இருந்தார். அப்போதைய எங்களின் நடவடிக்கைகளுக்கு, முன்னர் நடந்த இந்தச் சம்பவம் பெரும் உற்சாகத்தை அளித்தது.நவம்பர் 1927இல் மஹாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்திருந்தோம். அதன் பிறகுதான் ஜவகர்லால் நேரு வந்திருந்தார். வி.கல்யாணசுந்தர முதலியார் (வி.க.) சத்தியமூர்த்தி முதலானவர்களையும் அழைத்திருந்தோம். இப்படிக் கீரிமலையில் உள்ள வைத்திலிங்கம் மடத்தில் மூன்று, நான்கு வருடங்கள் கூட்டங்களை நடத்தினோம். பின்னர் மடக்காரர் விடமாட்டம் எண்டுட்டினம்.இவ் வேளையில், எமது சமபந்தி போசனத்தால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. காங்கேசன்துறையில் நாங்கள் போட்ட பெரிய பந்தல் எரிக்கப்பட்டது. பிறகு சுன்னாகத்தில் ஒரு பந்தல் போட்டு சமபந்தி போசனத்தை நடத்தினோம். நாகலிங்கத்தின் செல்வாக்கு சுன்னாகத்தில் ஓங்கியிருந்த காலம் அது. எனவே நாங்கள் அதைப் பிரச்சனைகளின்றி நடத்த முடிந்தது. 1930இல் திருநெல்வேலியில் நாங்கள் நடத்திய மாநாட்டுக்குக் கல் எறியப்பட்டது. இதெல்லாம் எதற்கு நடந்தது என்றால் நாங்கள் சமபோசனம் நடத்தியதற்காகத்தான்.அந்தக் காலத்தில் இன்னொரு சங்கம் தொடங்கினார்கள். ‘வேத ஆகம சைவ சித்தாந்தச் சங்கம்’ என்று பெயர். சேர் பொன் இராமநாதன் தான் அதற்குத் தலைவர். இதற்கு முன்னர் அவர் தமிழர்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் பலவற்றைச் செய்தவர். ஆனால் யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரஸ் தொடங்கிய காலப்பகுதியில் அவர் இதற்கு எதிரானவராகவே இருந்தார். “இவர்கள் சைவத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். வர்ணாச்சிரம தர்மத்திற்கு, சாதிப் பாகுபாட்டிற்கு விரோதமாக நடக்கிறார்கள். இவர்களின் சங்கம் வேதக்காரரின் சங்கம் (அந்தச் சமயத்தில் ஹன்டி மாஸ்டர் கிறிஸ்தவ சமயத்தில் இருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவரான செல்லையா என்ற கிறிஸ்தவரே வாலிபர் காங்கிரஸின் தலைவர்). இது சைவசமயத்திற்கு எதிரானது” என்று பிரச்சாரம் செய்தார்கள்.இப்படியான பிரச்சாரங்களுக்கு முட்டுக்கட்டை போடவேணுமென்று சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் அதிபராக இருந்த சிவபாதசுந்தரம் என்பவரைத் தலைவராக்கினோம். அவர் சைவசமயத்தைக் கரைத்துக் குடித்தவர். பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு சைவசமயப் புத்தகங்கள் எழுதியவர். நல்ல பேச்சாளர். சைவசமயத்திற்கு
ஒரு தலைவராக இருந்தார். அவர் தலைமைதாங்கிய அந்த மாநாட்டில் சமபந்தி நடத்துவதாக அறிவித்திருந்தோம். இரவோடிரவாக சைவசித்தாந்தச் சங்கத்தினர் பாம்புகளை அடித்துக் கிணற்றில் போட்டு, பெரிய அநியாயங்களைச் செய்தார்கள். இராமநாதன் இதைச் செய்யவில்லைதான். ஆனால் அவர்தான் அச்சங்கத்தின் தலைவர். இப்படி பல எதிர்ப்புகளைச் சந்தித்து காங்கிரஸ் நன்றாக வேரூன்றியது.இதற்கு முன்னர்தான் காந்தியை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தோம். ஹன்டி பாஸ்டர்தான் அதற்கு முன்னின்றவர். அவர் வந்தபோது பருத்தித்துறையோ அல்வாய்ப் பக்கத்தில் காந்தியின் கூட்டத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மண்டபத்திற்குள் விடமுடியாது என்று தடுத்து விட்டார்கள். இதனைக் காந்தி கேள்விப்பட்டு, அப்படியாயின் தான் அந்தக் கூட்டத்தில் பங்குபெற மாட்டேன் என்று சொன்னதால் எல்லோரையும் உள்ளுக்குள் விட்டார்கள் – ஆனால் விஸாந்தையில்தான்.1931இல் நான் வாலிபர் காங்கிரஸின் செயலாளராக இருந்தேன். டொனமூர் அரசியற் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்த நேரம். எங்களுடைய மகாநாட்டிற்கு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவர் சிறப்புப் பிரதிநிதியாக இந்தியாவில் இருந்து வந்திருந்தார். “டொனமூர்த் திட்டம் இலங்கை மக்களுக்கு முழுமையான அரசியல் உரிமைகளைத் தரவில்லை. இலங்கை மக்களுக்குப் பூரண சுதந்திரத்தைத் தா!” என்பதுதான் எங்களுடைய கருத்தாக இருந்தது.எமது செயற்குழுவில் பூரண சுயராஜ்யம் கோரி, தேர்தலைப் பரிகசிப்பது பற்றி ஆராய்ந்தோம். பகிஸ்கரிப்பை நடைமுறைப்படுத்துவதில்லை என்றுதான் முடிவெடுத்தோம். ஆனால் பொதுக்கூட்டத்தில் T.S.சுப்பையா என்ற பிரபல்யமான வழக்கறிஞர் எழுந்து “டொனமூர்த் திட்டம் எங்களுக்கு பூரண சுதந்திரத்தைத் தரவில்லை; அது எங்களுக்கு உரிமைகளை மறுக்கிறது. எனவே அரசாங்க சபைக்கான (State Council) தேர்தலைப் பகிஸ்கரிப்போம்! என்று பிரேரித்தார். உடனடியாக யாரோ இதை ஆமோதித்தார்கள். எல்லோராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. கமலாதேவி இதுபற்றி உணர்ச்சிமிக்க உரையொன்றை ஆற்றினார்.தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆரம்பித்த நேரம். வடபகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் கூப்பிட்டு கூட்டமொன்றை நாங்கள் கூட்டினோம். சேர் துரைசுவாமிதான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாங்கள் தேர்தல் பகிஸ்கரிப்பு பற்றி விளக்கி, அதுபற்றி ஒவ்வொரு வேட்பாளாரது கருத்துக்களையும் அறிந்தோம். சரவணமுத்து என்பவர் மாத்திரம் தான் தேர்தலில் நிற்கப் போவதாகக் கூறினார். ஏனையவர்கள் பகிஸ்கரிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். ஒருபடியாகச் சரவணமுத்துவையும் மறித்தோம்.ஜி.ஜி.பொன்னம்பலம் வவுனியாவில் போட்டியிட்டார். அவர் அப்போதுதான்
லண்டனில் இருந்து வந்திருந்தார். அவரது வழக்கறிஞர் தொழில் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வவுனியா-மன்னார் ஒரு தொகுதியாகவும், முல்லைத்தீவு-பருத்தித்துறைப் பகுதி ஒரு தொகுதியாகவும் அப்போது இருந்தது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் நாங்கள் வவுனியாவுக்குச் சென்று ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தன்னை எதிர்த்துப் போட்டியிடும் மன்னாரைச் சேர்ந்த ஆனந்தம் என்பவர் விலகினால் தானும் விலகிவிடுவதாக ஜி.ஜி. எங்களிடம் சொன்னார்.ஆனந்தம் தான் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சொல்லிவிட்டார். எனவே ஜி.ஜி.பொன்னம்பலம் தானும் போட்டியிடப் போவதாகச் சொல்லிவிட்டார். எங்களுடைய இளைஞர்கள் பலர் வவுனியாவுக்குச் சென்று ஜி.ஜி.பொன்னம்பலத்திற்காக வேலைசெய்தார்கள். ஆனால் அவர் தோற்றுவிட்டார்.வவுனியாவைத் தவிர வடபகுதியில் தேர்தல் நடைபெறவே இல்லை. அது ஒரு அமோகமான வெற்றி எங்களுக்கு. தென்னிலங்கையில் பெரும் வரவேற்பு. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக தேர்தல் பகிஸ்கரிப்பு மகத்தான வெற்றியைப் பெற்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெரும் அத்தியாயம் அது.இரண்டு மூன்று ஆண்டுகளின் பின்னர் தேர்தல் பகிஸ்கரிப்பு தமிழ் மக்களுக்கு மிகுந்த இழப்புக்களைத் தந்து விட்டது என்ற பிரச்சாரத்தை ஒரு பகுதியினர் உக்கிரமாகத் தொடங்கினர். அதற்குத் தலைமை வகித்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம். எங்களுடைய தேர்தல் பகிஸ்கரிப்பு இயக்கத்தினால்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் ஒரு பிரபல்யமான அரசியல் வாதியானார் என்பது என்னுடைய கருத்து. பகிஸ்கரிக்கப்பட்ட பகுதிகளில் பதில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கையாக இருந்து வந்தது. நாங்கள் அதனை எப்போதும் எதிர்த்து வந்துள்ளோம். இப்படி நெடுகலும் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டைதான். சண்டையென்றால் இப்போதுள்ள மாதிரியல்ல. கூட்டங்கள்தான்.1924இல் இருந்து 1942வரை தொடர்ந்தும் நாங்கள் எங்களுடைய மாநாடுகளைக் கூட்டி வந்தோம். 1942இல் தொல்புரம் வடக்கம்பரை அம்மன் கோவில் வீதியில் மாநாட்டை நடத்தினோம். அப்போது இரண்டாம் உலக மகாயுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு என்.எம்.பெரேராவின் மனைவியார் வந்திருந்தார். வெள்ளைக்காரரை இலங்கையை விட்டுக் கலைக்கவேண்டுமென்று அவர் பேசினார். அப் பேச்சிற்காக மல்லாகம் நீதிமன்றத்தில் ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இத்துடன் வாலிபர் காங்கிரஸின் செயல்களும் நின்று போயிற்று. அதன் பிறகுதான் வந்துவிட்டார்களே நம்முடைய நண்பர்கள் – தமிழரசுக் கட்சியார். ஆனால்
வாலிபர் காங்கிரஸின் தாக்கத்தை பல இடங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக சம ஆசன விடயத்தில். இதற்கு முன்னர் ஆங்கிலப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதே இல்லை. நான்தான் முதன்முதலில் இவர்களை அனுமதித்தவன்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு நான் அதிபராகப் போனபொழுது எந்தவொரு தாழ்த்தப்பட்ட மாணவனும் அங்கு கல்வி கற்கவில்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்கந்தாவின் முகாமையாளரான Dr.சுப்பிரமணியம் அவர்களிடம் “நான் அவர்களைக் கல்லூரியில் அனுமதிக்கப் போகிறேன். இனியும் அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல” என்று சொன்னேன். அவருக்கு நல்ல சந்தோஷம். ஏனென்றால் இரண்டு வருஷத்தில் பள்ளிக்கூடமும் நல்லா எழும்பிட்டது. நாலாம் வகுப்பிற்கு அனுமதிப் பரீட்சை வைத்து அதில் தேறும் எவரையும் எடுப்போம் என்று சொன்னேன். அவரும் ‘ஓம்’ எண்டிட்டார். நிறுவனரான கந்தையா மாஸ்டரைப் போய்க் கேட்டபோது, “நீ இன்னமும் அனுமதிக்கவில்லையோ?” என்று கேட்டார்.தேர்வுகளை நடத்தினேன். ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனும் பாஸாகவில்லை. சோதிச்ச ஆசிரியர்கள் எல்லாரும் பழைய ஆசிரியர்கள். பெடியங்களினர பெயர்களிலிருந்து – கந்தன், பூதன் என்று இருந்த எல்லாரையும் பெயிலாக்கிப் போட்டார்கள். எனக்கு விஷயம் விளங்கியது. அடுத்த வருஷம் புதிய இளம் ஆசிரியர்களை நியமித்து அவர்களைத்தான் சோதனையை நடத்தச் சொன்னேன். அவர்களில் ஒருவர்தான் N.S.கந்தையா. இப்படித்தான் சோதனை மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அனுமதித்தோம்.பின்னர் விடுதியிலும் இம்மாணவர்களை அனுமதித்தேன். அப்போது ஒரு மாணவனின் பெட்டியைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டு விட்டார்கள். நான் விடுதி மாணவர்களைக் கூப்பிட்டு, “யார் இதைச் செய்தது என்று எனக்கு நல்லாய்த் தெரியும். என்னிடம் நீங்கள் யார் செய்தது என்று ஒத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவனுடைய பெட்டியை எடுத்து, உடுப்புகளைக் காயவைத்து, இருந்தமாதிரி வைக்கவேண்டும்” என்று சொன்னேன். அவர்கள் அப்படியே செய்தார்கள்”.”யாழ்ப்பாணத்து மக்கள் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து காலங்காலமாக நிலவி வருகிறது. ஆனால் இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும், தீவிர ஆதரவாளர்களாயும் இயங்கிய கார்த்திகேயன் மாஸ்டர், வைத்திலிங்கம் மாஸ்டர், ஹன்டி மாஸ்டர், உங்களைப் போன்றவர்களை மிகச் சிறந்த ஆசிரியர்களாக யாழ்ப்பாண மக்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பிரித்தெடுப்பதில் வல்லவர்கள் என்று சொல்லப்படுவதை இது நிரூபிக்கிறதா? இந்த நிலைமையை எவ்வாறு விளங்கிக் கொள்வது?” என இந்த இடத்தில் கேட்கிறோம்.
“முக்கியமாக நீங்கள் குறிப்பிட்ட அனைவருமே மிகச்சிறந்த ஆசிரியர்கள். பிள்ளைகளின் படிப்பிலே கரிசனை எடுத்து, அவர்களை நல்ல வழியிலே வழிப்படுத்த கடுமையாக உழைத்தவர்கள். கணித ஆசிரியரான வைத்திலிங்கம், மூன்று வருஷத்தில் படிப்பிக்க வேண்டிய பாடத்திட்டத்தை இரண்டு தவணைகளில் படிப்பித்து முடிப்பார். இதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிதான் அந்தக் காலத்தில் இலங்கையின் ஆகக்கூடிய பொறியியலாளர்களை உருவாக்கியது. கார்த்திகேயன் மாஸ்டர் போன்ற தீவிரமான உழைப்பாளர்கள் ஓரளவுக்குத்தான் இருந்தார்கள். தாங்கள் சொல்லிவந்த கருத்துக்களுக்கு ஏற்றமாதிரி கல்வி கற்பித்தலில், மிகவும் நேர்மையைக் கடைப்பிடித்தார்கள். இதுவே அவர்களுக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது.அந்தக்காலத்து அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் இவர்களைப் போலவே விசுவாசமிக்க சேவையாற்றினார்கள். ஐயாத்தினம் மஹாஜனாவைப் பொறுப்பேற்றபோது, பெரிய கட்டிடங்கள் எதுவும் இருக்கவில்லை. இன்றைக்கு மஹாஜனாவில் இருக்கிற எல்லாக் கட்டிடங்களும் ஐயாத்தினத்தால் கட்டப்பட்டதே. இவ்வாறான உழைப்பை அன்றைக்கு இருந்த பெரும்பாலான அதிபர்களிடம் காணலாம்.ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்களுடைய பள்ளிக்கூடத்தில் விடுமுறைக்கால வகுப்புக்களை போட்டிபோட்டுக்கொண்டு நடத்தினார்கள். அந்தக் காலத்திலேயே நேர அட்டவணை (Time-Table) போட்டு நாங்கள் அதனை ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. அநேகமாக எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இப்படி ஆசிரியர்கள் இலவசமாகக் கற்பித்தார்கள்.யூனியன் கல்லூரியில் ஐ.பி.துரைத்தினம் நிறைய நேரத்தைச் செலவிட்டார். அவர் கல்லூரியைப் பொறுப்பேற்று தனித்தனியாக நடந்துவந்த சிறுவர் பாடசாலையையும் உயர்தரப் பாடசாலையையும் ஒன்றாக்கியபோது மஹாஜனக் கல்லூரியைவிட மிகவும் வளர்ச்சியுற்ற ஒன்றாக அது விளங்கியது. அமெரிக்க மிஷனரிமாரின் பங்களாவில் முதன்முதல் வசித்த யாழ்ப்பாணத்தவர் ஐ.பி.துரைத்தினம். அவருடைய தந்தையாரான பொன்னையா யூனியன் கல்லூரிக்கு அமைந்திருக்கும் அந்தப் பங்களாவில் முன்னர் கிளாக்காக வேலை பார்த்தவர். ஒரு சின்ன அறையைத் தவிர வேறு எங்கும் போவதற்கு மிஷனரிமார் அவரை அனுமதித்ததே இல்லை. அதே பங்களாவில் மிகவும் கெட்டிக்காரரான அவரது மகன் குடியேறினார். ஆசிரியர்களுக்கு அவர் அவ்வளவாக மதிப்புக் கொடுத்ததில்லை. அதனால் யூனியன் கல்லூரியை விடவும் அருகிலிருந்த மகாஜனா மிகவும் தரமுயர்த்தப்பட்ட (Super Grade College) கல்லூரியாக வளர்ச்சியுற்றது. இதற்காக ஐயாத்தினம் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல.இதைப்பற்றி ஒருமுறை சம்பாஷிக்கையில் என்னுடைய நல்ல நண்பரான துரைத்தினம் சொன்னார், “My teachers let me down” (என்னுடைய ஆசிரியர்கள் என்னைக் கைவிட்டுவிட்டார்கள்) என்று. “ஏனென்றால் நீர் ஆசிரியர்களுடன்
ஒத்துழைக்கவில்லை. எனவே அவர்கள் உம்முடன் ஒத்துழைக்கவில்லை” என்று நான் திருப்பிச் சொன்னேன். நான் மிகவும் கடுமையானவனாக இருந்தபோதும், என்னுடைய ஆசிரியர்களும், உப அதிபரும்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம். நான் சும்மா இங்கே அங்கே உலாத்தி முகப்பாத்தி பண்ணிக்கொண்டு திரிகிறானான், என்று எப்போதும் அவர்களை முக்கியப் படுத்தி உற்சாகமூட்டுவேன். இப்படித்தான் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்தினோம். நாங்களும் (ஸ்கந்தாவும்) மஹாஜனாவும் சேர்ந்து உருவாக்கிய வைத்தியர்களும் பொறியியலாளர்களும் எவ்வளவு பேர். நானாவது சில முஸ்பாத்திகள் செய்வேன். ஆனால் ஐயாத்தினம் மிகவும் கடுமையான ஒழுக்கசாலி. அதை அவர் கல்லூரியிலும் நடைமுறைப்படுத்தினார். இன்றைக்கு எல்லாம் மண்ணாகிப் போகின்றன.ஐயாத்தினம் பற்றி ஒரு விஷயம் கட்டாயம் சொல்லவேண்டும். யாழ்ப்பாணத்தில் அன்றைய கல்வி நிறுவனங்களின் பணி பற்றி விளக்குவதற்கு இது உதவும். எமது கல்லூரியின் பழைய மாணவரான கனகசபாபதியின் அண்ணர் என்னிடம் வந்து, தனது தம்பி கனகசபாபதி இந்தியாவில் பட்டம் பெற்று வந்துள்ளதாகவும் அவருக்கு ஆசிரியர் பதவி வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். நான் ‘ஓம்’ என்று சொல்லிவிட்டேன். பின்னர் இலங்கைப் பட்டதாரி ஒருவரும் ஆசிரியர் பதவி கேட்டு வந்தார். நான் அவருக்கும் ‘ஓம்’ என்று சொல்லிவிட்டேன். இரண்டு வெற்றிடங்கள் வரும் என எதிர்பார்த்திருந்தேன். என்னுடைய கஷ்டகாலம் ஒரேயொரு ஆசிரிய பதவியே வெற்றிடமாக வந்தது. எனக்குக் கனகசபாபதியை எடுக்கவே விருப்பமாக இருந்தது. ஆனால் மற்ற ஆசிரியர்கள் இந்தியப் பட்டதாரியைவிட இலங்கைப் பட்டதாரியை எடுப்பதற்கே விரும்பினார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.கனகசபாபதிக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. நான் நேரடியாக ஐயாத்தினத்திடம் சென்று கனகசபாபதிக்கு ஒரு ஆசிரியர் பதவி தரும்படி கேட்டேன். அவர் மாட்டேன் என்று இறுக்கமாகச் சொல்லிவிட்டார். நானும் விடவில்லை. மூன்றாவது முறையாகச் சென்றபொழுது, “பிழையான நாணயமொன்றை எனக்கு விற்கப் பார்க்கிறீர்கள்” என்று கடுமையாகச் சொன்னார். “அப்படி இல்லை. ஆள் நல்லவன். நீங்கள் மூன்று மாதங்களுக்கு வைத்திருங்கள். அதற்குப் பிறகு எனது கல்லூரியில் ஒரு வெற்றிடம் வருகிறது. நான் ஆளைக் கட்டாயம் எடுக்கிறேன்” என்று சொன்னேன். மிகவும் வில்லங்கப்பட்டே ஐயாத்தினம் அவருக்கு ஆசிரிய நியமனம் தந்தார்.அதற்குப் பிறகு பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறந்த மாணவனுக்கான தங்கப் பதக்கத்தை கனகசபாபதி பெற்றார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ‘இப்போது கனகசபாபதியை நீங்கள் எங்களுடைய கல்லூரிக்கு அனுப்பி வைக்கலாம். என்னிடம் ஒரு ஆசிரியர் பதவி வெற்றிடமாக உள்ளது’ என்று ஐயாத்தினத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘எங்களுடைய கல்லூரிக்கு அவரை
மிகவும் தேவையாக இருக்கிறது. எனவே அவரை உங்களுடைய கல்லூரிக்கு அனுப்ப முடியாது. தயவுசெய்து மன்னிக்கவும்’ என்று அவர் மறுமொழி எழுதினார்.இதே கனகசபாபதிதான் ஐயாத்தினத்திற்குப் பிறகு மஹாஜனாவிற்குக் கிடைத்த மிகச்சிறந்த அதிபராக விளங்கினார்.
அவர் கூறிய கருத்துக்களை மேலும் ஒரு பகுதியில்
தொடருகிறேன்
நன்றியுடன்
