ஜெர்மனியின் ஓபர்ஹவுசன் (Oberhausen) நகரிலுள்ள ஒஸ்டர்ஃபெல்ட் (Osterfeld) பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி காலை சுமார் 9.40 மணியளவில், பள்ளியின் விளையாட்டு உடை மாற்றும் அறைக்குள் பட்டாசு ஒன்று வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அறைக்குள் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த 12 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் மொத்தம் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 மற்றும் 11 வயதுடைய ஐந்து மாணவர்கள் தலைவலி மற்றும் காதுவலி ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை ஆரம்பம்
சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் எத்தனை வயதுடையவர்கள் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜெர்மனியின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 12ஆவது பிரிவு விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளது.
நான்கு நாட்களுக்கு முன்னரும் மற்றொரு சம்பவம்!
அக்டோபர் 30ஆம் தேதி, நியூவீட் (Neuwied) நகரிலுள்ள மற்றொரு பள்ளியின் ஆண்கள் கழிப்பறையில் பட்டாசு வெடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சம்பவத்தில் எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை இந்தச் சம்பவங்கள் மீண்டும் எழுப்பியுள்ளன.
