யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடைய கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் தொடர்பில் மாவட்ட செயலர் தெரிவிக்கையில்,
தையிட்டி காணி பிரச்சனை தொடர்பில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினுடைய ஏற்பாட்டில், கடந்த 10ஆம் திகதி கொழும்பில் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி காணி உரிமையாளர்களை கொழும்பிற்கு அழைத்து கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், காணி உரிமையாளர்களை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து, அந்தக் கூட்டத்திலே அவர்கள் கலந்து கொள்வதற்குரிய போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் இதர ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினோம்.
அதன் போது காணி உரிமையாளர்கள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள அந்தக் கலந்துரையாடலிலே கலந்து கொள்வதற்கான தங்களுடைய சம்மதத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் , தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினுடைய தலைவர் கலாநிதி விஜித் ரோகண, மாவட்ட மேலதிக செயலர்கள் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
