துருக்கியின் மனிசா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 11 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் துர்குட்லு மாவட்டத்தில் உள்ள இஞ்சி உஸ்மெஸ் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப அனடோலியன் உயர்நிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பள்ளி மாணவர், அவரது பெற்றோர் இருவர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர் தனது தாத்தா பாட்டியின் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்ததாகவும், அந்த ஆயுதத்திற்கு அவரது தாத்தாவிடம் உரிமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் பள்ளியில் கொடுமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
