கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் மீள அள்ளப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி ஆணையாளரின் கடுமையான உத்தரவினை அடுத்து அவற்றினை மீள அள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினர் சுமார் 300 டிப்பர் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அவற்றினை மீள அள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் , அவற்றினை மீள அள்ள வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் கடுமையான உத்தரவினை வலி. தெற்கு பிரதேச சபையினருக்கு பிறப்பித்தமையை அடுத்து, அவற்றினை மீள அள்ளும் நடவடிக்கையில் வலி. தெற்கு பிரதேச சபையினர் முன்னெடுத்து வருகிறனர்
அதேவேளை, வலி.வடக்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் மீள அள்ளப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்ட நிலையில் , அவற்றினையும் மீள அள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு விட்டதாக , வலி. வடக்கு பிரதேச சபை செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்த நிலையில் , சிறிதளவான கழிவுகளே அகற்றப்பட்டுள்ளதாகவும் பெருமளவான கழிவுகள் அகற்றப்படவில்லை என வலி. வடக்கு உறுப்பினர்கள் , உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தினர்
அதனை அடுத்து உதவி உள்ளூராட்சி ஆணையாளர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் , கொட்டப்பட்ட அனைத்து மருத்துவ கழிவுகளும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன் , அதனை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க பொது சுகாதார பரிசோதகருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
