திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில், தொல்பொருள் திணைக்களம் அடையாளம் கண்ட தொல்பொருள் தளத்தில் தாம் எவ்வித புதிய நிர்மாணங்களையும் அமைக்கவில்லையென மறுதலித்துள்ளது. இதனிடையே தொல்பொருள் திணைக்களம், திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) எழுத்து மூல அறிக்கை மூலம் அத்தகைய உறுதிமொழியை வழங்கியுள்ளது.
அதனையடுத்து, ஏற்கனவே தம்மோடு தொல்பொருள் திணைக்களம் எய்தியிருந்த உடன்பாட்டோடு இணங்கி, இன்றைய அறிக்கையை மன்றில் முன்வைத்தமையினால், தமது தரப்பால் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை இதற்கு மேல் தொடரத் தேவையில்லை என்று, வழக்காளி சார்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மன்றுக்குத் தெரிவித்தார். அதன்படி, இவ்வழக்கு இருதரப்பு இணக்கத்துடன் முடிவுறுத்தப்பட்டது.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி, தொல்பொருள் திணைக்களத்தால் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் அமைந்திருந்த தளத்தில் அடையாளம் காணப்பட்ட தூபியின் சிதிலங்களை இணைத்துக் கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு எதிராக, பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா கோகிலரமணி கணேசினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
“என்னுடன் 2019ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது. அதன்படி, அந்தத் தளத்தில் உள்ள தொல்பொருள் அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்க மட்டும் உடன்பாடு எட்டப்பட்டது; புதிதாக எந்தக் கட்டுமானங்களும் அமைக்க முடியாது. ஆனால், அதனை மீறி தற்போது புதிய கட்டுமானத்தைத் தொல்பொருள் திணைக்களம் அமைக்கின்றது. இது என்னுடன் செய்துகொண்ட உடன்பாட்டை மீறும் செயலாகுமென குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
