பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, ஊதிய உயர்வு இன்மை, கல்விச் சூழல் பாதிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்களும் தொழிற்சங்கத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் தலைமையில் தொடங்கிய போராட்டம் தற்போது தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தீவிரமடைந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 5 இலட்சம் முதல் 7 இலட்சம் பேர் வரை போராட்டங்களில் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். தலைநகர் பாரிஸில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஓய்வூதியச் சீர்திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைப் போன்ற பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என தொழிற்சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவான ஊதிய உயர்வு, வரி சீர்திருத்தங்கள், இளைஞர்களுக்கான மேம்பட்ட கல்விச் சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
CFDT தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மேரிலைஸ் லியோன் கூறுகையில், தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் மூலம் கண்ணியமான வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கல்வி நிறுவனங்கள், ரயில்வே, பொது மருத்துவமனைகள் மற்றும் அஞ்சல் சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர்த்தாரைகள் பயன்படுத்தப்பட்டன.
போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடுமையானவை எனப் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரான்சில் உருவாகியுள்ள மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள், ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் இளைஞர்கள் தலைமையில் நடைபெறும் சமூக மற்றும் பொருளாதார உரிமைப் போராட்டங்களுடன் ஒத்துப் போகும் வகையில் அமைந்துள்ளன.
