யாழ்ப்பாணம், ஜூலை 06: இலங்கையில் ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் முதன்முதலாகக் களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை வளாகத்தில் பட்டம் பெற்ற இரு தமிழ் கலைஞர்களில் ஒருவரான சிரேஷ்ட ஓவியர் கண்ணா அவர்கள் எழுதிய “கண்ணாவின் கோடுகளும் கோலங்களும்” நூல் அறிமுகமும் நயவுரை நிகழ்வும் நேற்றைய தினம் (05.07.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் அரங்கக் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றல், தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் என உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை செல்வி சிவானி ரவிநந்தா அவர்கள் நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சிகளையும் அவரே மிக நேர்த்தியாகவும் அழகிய தமிழ் நடையிலும் தொகுத்து வழங்கியிருந்தார்.
அனுபவக் களஞ்சியமாக மிளிரும் நூல்!
யேர்மனி தேசத்தில் ஓவியர் கண்ணா அவர்கள் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பெற்றுக்கொண்ட கலைசார் அனுபவங்களையும், அங்குள்ள மக்களது கலைசார் பார்வைகளையும் உள்ளடக்கிப் பல பகுதிகளாக இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஓவியரின் கைவண்ணத்தில் உருவான சித்திரங்கள், சிற்பங்கள் மற்றும் அவை பெற்றுக்கொண்ட சர்வதேசப் பரிசுகள் எனப் பல்வேறு அம்சங்களைத் தாங்கிய ஓர் அரிய அனுபவக் களஞ்சியமாக “கோடுகளும் கோலங்களும்” நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓவியம் மற்றும் சிற்பத்துறையைக் கற்கும் இளந்தலைமுறை மாணவர்களுக்கு ஒரு சிறந்த உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இந்நூல் அமையும் என்பதால், மாணவர்கள் முன்னிலையில் இது அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் மாணவர்களும்,மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தில் பயிலும் ஆசிரிய மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆளுமைகளின் ஆசியும் உரைகளும்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் அ. சண்முதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் ஆசியுரையை வழங்கியிருந்தார்.
விழாவின் பிரதம விருந்தினராகச் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறைத் தலைவர் எஸ். சூரியகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நூலுக்கான நயவுரைகளை:
• வ. பாலமுருகன் (தலைவர், சித்திரத்துறை, காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம்)
• திருமதி சுதர்சினி விக்னமோகன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)
• கெவின் ஸ் ரீபன் (முதலாம் ஆண்டு சித்திரத்துறை மாணவன், காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம்) ஆகியோர் வழங்கினர்.
•
• மாணவன் கெவின் “கண்ணாவின் கோடுகளும் கோலங்களும் – கலைஞனின் தூரிகை வழி…” எனும் தலைப்பில் தனது நயவுரையை ஆற்றியிருந்தமை சபையோரின் வரவேற்பைப் பெற்றது.
அமரர் க. கைலாசபதியின் நினைவோடு நூலாசிரியரின் பதிலுரை:
தொடர்ந்து நடைபெற்ற பதிலுரையில் நூலாசிரியர் ஓவியர் கண்ணா அவர்கள் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். “இன்று மாணவர்கள் சித்திர மற்றும் சிற்பக் கலைகளைக் கற்பதற்கும், தாம் அவர்கள் முன்னிலையில் பெருமையுடன் நிற்பதற்கும் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அடிக்கல் நாட்டி வித்திட்டவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் அமரர் க. கைலாசபதி அவர்களாவார்” என அவரை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.
மேலும், தான் யேர்மனியில் பெற்ற கலைசார் அனுபவங்கள் தாயகத்தில் கலை பயிலும் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே இந்நூலை இங்கு வெளியிட விரும்பிதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கிய பல்கலைக்கழகத்தின் துறைசார் அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
வழக்கமான மரபை மாற்றிய விசேட கௌரவிப்பு:
விழாவின் ஒரு சிறப்பம்சமாக, கலந்துகொண்ட பிரமுகர்களுக்கு வழமையாக அணிவிக்கப்படும் பொன்னாடை மற்றும் மாலைகளுக்குப் பதிலாக, அவர்களது உரை நிறைவடைந்ததும் கௌரவிக்கும் முகமாகப் புதுமையான முறையில் ‘பழக்கூடைகள்’ வழங்கி வைக்கப்பட்டன. இந்த ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியிலான மாற்றம் சபையோரால் பெரிதும் பாராட்டப்பட்டது.
நிகழ்வின் இறுதிப் பகுதியாக, வெற்றிமணி பத்திரிகையின் உலகத் தொடர்பாளர் யோ. சாந்தி அவர்கள் நன்றியுரையினை நிகழ்த்த, கலை ஆர்வலர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரது பங்குபற்றலுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது.
