அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையே அபுதாபியில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தையில், போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும், நீண்டகாலமாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ரஷ்யாவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி, இரு தரப்பினரும் பெரிய அளவிலான போர்க் கைதிகள் பரிமாற்றத்திற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சில விவகாரங்களில் பரஸ்பர புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைதிகள் பரிமாற்றம் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் இடம்பெறலாம் என ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. கைதிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை இறுதி செய்யப்படும் என அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னரும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ஆலோசனை நடத்துவதற்காக, அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடன் மாஸ்கோவுக்குச் செல்லவுள்ளதாக குஷ்னர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து, அமெரிக்கா முன்வைத்துள்ள சில யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அயர்லாந்தின் டப்ளினுக்கும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதிகள் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மார்ச் மாதம் இரு தரப்பினரும் தலா 200 போர்க் கைதிகளை விடுவித்திருந்தனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்தில் தலா 146 கைதிகள் பரிமாறப்பட்டதுடன், துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தது.
இருப்பினும், பிராந்திய உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் போருக்குப் பிந்தைய ஏற்பாடுகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமானதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள ஜாரெட் குஷ்னர், போருக்குப் பிந்தைய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமைதித் தீர்வொன்றை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைன் பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகாமியா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கும் வகையில் பலதரப்புப் பேச்சுவார்த்தை முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவின் பங்கேற்பின்றி ஐரோப்பியப் பாதுகாப்பு குறித்து தீர்மானிக்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் தெரிவித்துள்ளார். அடுத்தகட்ட இராஜதந்திர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதித்துவம் தொடர்பாக விவாதிக்கப்படும் என அமெரிக்கத் தரப்பும் குறிப்பிட்டுள்ளது.
