ரொக்கெட் உந்துவிசைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறுகிய தூரம் பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இக்கார் 2028-ஆம் ஆண்டு உற்பத்திக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸின் வேக்கோவில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், குளிர் வாயு உந்துவிசைக் கருவிகள் பொருத்தப்பட்ட ரோட்ஸ்டர் கார், டெஸ்லாவின் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது பக்கவாட்டுச் சுழற்சி செய்து தனது திறனை வெளிப்படுத்தியது. மேலும், காரின் வேகம் மற்றும் சாலைப் பிடிப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் காரின் ரொக்கெட் உந்துவிசைப் பதிப்பை முன்பதிவு செய்ய மொத்தம் 2,50,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். இதில் முதற்கட்டமாக 5,000 டாலர் வைப்புத்தொகையும், பத்து நாட்களுக்குள் கூடுதலாக 2,45,000 டாலரும் செலுத்த வேண்டியுள்ளது. உந்துவிசைக் கருவிகள் இல்லாத செயல்திறன் பதிப்பை முன்பதிவு செய்ய 50,000 டாலர் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் உந்துவிசைப் பதிப்பு நிறுவனத்தின் அழைப்பின் பேரில் மட்டுமே கிடைக்கும் என்றும், பொதுச் சாலைகளில் பறப்பதற்கு அனுமதி இல்லை என்றும் டெஸ்லா இணையதளம் குறிப்பிடுகிறது. இக்காரின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, 2017-ஆம் ஆண்டிலேயே ரோட்ஸ்டர் காரின் முன்மாதிரியை மஸ்க் அறிமுகப்படுத்தி, 2020-ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கும் என அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் உற்பத்தி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், திட்டமிட்ட காலத்தில் கார் சந்தைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில், டெஸ்லா தனது கவனத்தை தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பம் மற்றும் மனித உருவ ரோபோக்கள் பக்கம் திருப்பி வருகிறது. கேமராக்களை மட்டுமே நம்பியிருக்கும் தானியங்கி ஓட்டுநர் அணுகுமுறையின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
