உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பைனான்ஸில் (Binance) இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, அதன் வைப்புத்தொகை மற்றும் பணம் மீளப்பெறும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவுடன் தொடர்புடைய ஹேக்கிங் குழுவொன்று இருக்கலாம் என பிளாக்செயின் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 6.36 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சி சொத்துக்கள் பைனான்ஸ் வாலெட்டுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்செயின் புலனாய்வு நிறுவனமான TRM தெரிவித்துள்ளது. இதனை இதுவரை பதிவான மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டுச் சம்பவமாகவும் அந்த நிறுவனம் வர்ணித்துள்ளது.
தாக்குதலாளர்கள் 10 வெவ்வேறு பிளாக்செயின்கள் ஊடாகப் பணத்தை வெளியேற்றியுள்ளதாகவும், அதில் பெரும்பகுதி சுமார் 20 நிமிடங்களுக்குள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு வட கொரியாவின் உயர்மட்ட இணையவழிக் குற்றக் குழுவான ‘டிரேடர் டிரேட்டர்’ (TraderTraitor) காரணமாக இருக்கலாம் என TRM நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் வட கொரியாவுடன் தொடர்புபடுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி கொள்ளைச் சம்பவங்களுடன் தற்போதைய தாக்குதலின் செயற்பாட்டு முறைகள் ஒத்துப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிரிப்டோகரன்சி நிறுவனமான பைபிட் (Bybit) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டிருந்தன. அந்தத் தாக்குதலுக்கு வட கொரியாவும் டிரேடர் டிரேட்டர் குழுவும் காரணம் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI குற்றஞ்சாட்டியிருந்தது.
இதேவேளை, பைனான்ஸ் மீதான தாக்குதலிலும் இதே குழு சம்பந்தப்பட்டிருக்கலாம் என பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயின்அனாலிசிஸின் (Chainalysis) இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜொனாதன் லெவின் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத் தடைகளை எதிர்கொண்டு வரும் வட கொரியா, தனது அணுசக்தித் திட்டத்திற்கான நிதியைத் திரட்டுவதற்கும் வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கும் இணையவழிக் குற்றச் செயல்கள் மற்றும் கிரிப்டோகரன்சி திருட்டுகளில் ஈடுபடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனினும், இந்தத் தாக்குதலுக்கு வட கொரியா பொறுப்பானது என்பதை பைனான்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தாக்குதலாளி ஒருவர் மென்பொருள் உள்கட்டமைப்புப் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினியை ஊடுருவி, நிறுவனத்தின் உள்ளகச் சேவைக்குள் அங்கீகரிக்கப்படாத வகையில் நுழைந்து பணத்தை வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலெட்டுகளின் தனிப்பட்ட பாதுகாப்புச் சாவிகள் கசிந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு விசாரணைகளுக்காக வைப்புத்தொகை மற்றும் பணம் மீளப்பெறும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியானவை அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை நிறுவனம் ஈடுசெய்யும் என அதன் இணை நிறுவனரான யி ஹே உறுதியளித்துள்ளார். பயனர்களின் நிதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெதர் (Tether) நிறுவனம் சுமார் 1.6 பில்லியன் டொலர் பெறுமதியான USDT நாணயங்களையும், சர்க்கிள் (Circle) நிறுவனம் சுமார் 800 மில்லியன் டொலர் பெறுமதியான USDC நாணயங்களையும் முடக்கியுள்ளதாக அந்தந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பைனான்ஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாக்குதல் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை பிட்காயினின் பெறுமதி 3.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 79,000 அமெரிக்க டொலருக்கும் கீழ் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி சந்தையின் பாதுகாப்பு, பரிவர்த்தனைத் தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் பயனர்களின் சொத்துப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
