— — —
* கர்தினால் மல்கம் ரஞ்சித் சமயப் பதவியைக் கடந்து இனம் சார்ந்து சிந்திப்பதில் தவறவில்லை!
* ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவுக்குப் பின் மௌனத்தில் தமிழ்க் கத்தோலிக்க திருஅவை!
* 2024 இற்குப் பின்னரான இலங்கை அரசியல் சூழல் தமிழர்களுக்கு உணர்த்துவது என்ன?
— — —
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலை நேரடியாகவும் அதற்கு உடனடி உடந்தையாகவும் இருந்த “மூன்றாம் தரப்பு” குற்றவாளிகளுக்கான வழக்கின் தீர்ப்பு மாத்திரமே வெளிவந்துள்ளது.
இருப்பினும், பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அரசியல் அதிகார வர்க்கம் மற்றும் உயர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த “பிரதான சூத்திரதாரிகள் மற்றும் மூளை வகுத்தவர்கள்” (Masterminds) பற்றிய விசாரணைகள் தற்போதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அவர்கள் மீதான இந்த நீதி விசாரணைகள், ”இலங்கைத் தேசிய பாதுகாப்பு” என்ற சட்ட மற்றும் அரசியல் பாதுகாப்பு வளையத்திற்குள் சுருக்கப்பட்டு, பெரும்பான்மை சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டாத வகையில் மடைமாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை.
காலப்போக்கில், இத்தகைய மூலோபாயம் காரணமாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கூட இது குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளும் சூழல் உருவாகலாம்.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரிலும் அதன் பின்னரான சூழலிலும், தமிழர்களின் அரசியல் நியாயங்களைச் சிதைத்து பிளவுபடுத்தியதன் மூலமே “சிங்கள பௌத்த தேசம்” என்ற மேலாதிக்கக் கோட்பாடு நிலைநிறுத்தப்பட்டது.
இந்த அரசியல் யதார்த்தம் பற்றிய ஆழமான புரிதல் பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் மாத்திரமல்ல, பிரதான சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் தெளிவாகவே காணப்படுகிறது.
ஆகவே, இலங்கைத்தீவில் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் மாத்திரமே வன்முறையாளர்கள் என்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதும், அதேவேளை கொழும்பை மையப்படுத்திய அரசியல் – பாதுகாப்பு சார்ந்த உயர் அதிகாரிகள் “தேசிய பாதுகாப்பின் காவலர்கள்” (Guardians of National Security) என்ற பிம்பத்தைத் தக்கவைப்பதும் இதன் பிரதான நோக்கமாகத் தெரிகிறது.
இத்தகையதொரு செய்தி, இத்தீர்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் போக்குகள் மூலமாக, எவரும் நோகாத முறையிலும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்குத் திருப்தியளிக்கும் வகையிலும் மிக நாசூக்காகக் கடத்தப்படும் வாய்ப்புகளே மேலோங்கிக் காணப்படுகின்றன.
இத்தீர்ப்பின் சட்டப்பூர்வத் தன்மைக்கு அப்பால், இதனைச் சூழ்ந்துள்ள அரசியல் – சமூகக் கட்டமைப்பையும், இதன் வழியே கடத்தப்படும் மறைமுக நிகழ்ச்சி நிரலையும் இலங்கையின் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், குறிப்பாக தமிழ்க் கத்தோலிக்க திருஅவை மிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இக்கட்டுரை முதன்மையாக வாதிடுகிறது.
குறிப்பாக, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரில், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட அரச வன்முறைகள் எதற்கும் முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற பரவலான ஆதங்கம் இன்று வரை நிலவுகிறது.
அதுமட்டுமன்றி, மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தொடர்ச்சியான இன வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் நீதிகோரிய குரல்கள், வரலாற்று ரீதியாக அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படாமலேயே மௌனிக்கப்பட்டு வந்துள்ளன.
இத்தகையதொரு சூழலில், ஏனைய வரலாற்று ரீதியான மனித உரிமை மீறல்களுக்கான நீதிப் பொறிமுறைகள் தொடர்ந்தும் மந்தகதியிலேயே காணப்படுகின்றன.
இந்நிலையின் பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மிக விரைவாக நகர்த்தப்பட்டிருப்பது, இலங்கையின் ஒட்டுமொத்த அரசக் கட்டமைப்பின் முன்னுரிமைகள் மற்றும் அதன் பாரபட்சமான அணுகுமுறைகள் குறித்த நியாயமான சமூகக் கேள்விகளை அரசியல் தளத்தில் தோற்றுவிக்கிறது.
ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட- காயமடைந்த அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் நியாயமானதே.
ஆனால், எண்பது ஆண்டுகால சிங்கள – தமிழ் இன முரண்பாட்டின் விளைவாக, குறிப்பாக 1956 / 58 ஆம் ஆண்டுகளில் இருந்து 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழல் வரை தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வன்முறைகள் குறித்துப் பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள், போதிய சாட்சியங்களுடன் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.
இருப்பினும், அந்த அறிக்கைகள் யாவும் நடைமுறைப்படுத்தப்படாமல் அதிகாரத்துவக் கிடப்பில் போடப்பட்டதே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் எந்தவொரு காத்திரமான சட்ட நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை
இத்தகையதொரு வரலாற்றுப் பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஐநா மனித உரிமைகள் சபையில் முறையிடுவேன் என்று ஆரம்பத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அச்சுறுத்தியிருந்தார்.
எனினும், இறுதியில் அவர் ஒட்டுமொத்த சிங்களப் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே, தர்க்கரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் காய்நகர்த்தியுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால், இங்கு எழும் மிக முக்கிய கேள்வி என்னவெனில், போர்க் குற்றங்களின் சாட்சியமாக விளங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவுக்குப் பின்னர், இன்றைய தமிழ்க் கத்தோலிக்க திருஅவை ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையில் பேணுகின்ற மௌனம் யாருடைய தவறு என்பதாகும்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் சாட்சியப் பொறிமுறையான ‘ஒஸ்லாப்’ (OSLAP) எனப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு, ஒக்ரோபர் 2025 இல் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் சபையின் 60-ஆவது கூட்டத்தொடரில் Resolution 60/1 இன் மூலம் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.–
ஆயர் இராயப்பு ஜோசப் அன்று விதைத்த சர்வதேச மயமாக்கல் மற்றும் துணிச்சலான சாட்சியங்களின் விளைவாகவே, இலங்கையின் உள்நாட்டு விசாரணை வழிமுறைகள் சுதந்திரமானவையோ அல்லது நம்பகத்தன்மை வாய்ந்தவையோ அல்ல என்ற வரலாற்று முடிவுக்கு ஐநா தொடர்ச்சியாக வர நேரிட்டது.
இதன் பயனாகவே, 2014 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் சபையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 2015 இல் வெளியிடப்பட்ட ஐநா போர்க்குற்ற அறிக்கை, இலங்கையின் குற்றவியல் நீதித்துறை அமைப்பு இத்தகைய பாரிய போர்க்குற்றங்களை சுயாதீனமாக விசாரிக்கத் தகுதியற்றது என பகிரங்கமாக சுட்டிக்காட்டியது.
அத்துடன், சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய ஒரு கலப்பு நீதிமன்றத்தை (Hybrid Court) உருவாக்கப் பரிந்துரைத்தது.
எனினும், கொழும்பு அரசாங்கம் தனது இராணுவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வெளிநாட்டு நீதிபதிகளின் தலையீட்டை முற்றாக நிராகரித்தது.
இந்த முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும், 2021 இல் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன் ஊடாக, இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சான்றுகளைச் சேகரித்து, எதிர்கால சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்காகப் பாதுகாக்கும் பிரத்யேகப் பொறுப்பு ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.
சமயப் பணிகளுக்கு அப்பால், ஈழத்தமிழ் இனத்தின் ஆன்மாவாகச் சிந்தித்து, அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் நடந்தது திட்டமிட்ட ‘இன அழிப்பு’ என்பதை 146,000-இற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட புள்ளிவிவர ஆதாரங்களுடன் சர்வதேச அரங்கில் ஆயர் உரத்து வாதிட்டார்.
ஆயரின் ஆன்மீகத் தலைமைத்துவமும், அந்த நேரத்தில் தமிழ்த் தலைவர்களின் உத்திசார்ந்த அரசியல் நகர்வுகளும் ஒன்றிணைந்து பயணித்தது.
இதன் காரண காரியமாகவே, பேரினவாத அரசின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத பேசுபொருளாக நிலைநிறுத்த முடிந்தது.
கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் கூட்டுரிமை என்ற விவகாரத்தில். ஆயர் இராயப்பு ஜோசப்பின் உத்தி, தமிழ்த் தரப்பை ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் ஒன்றுபடுத்தியது.
ஆனால் ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவுக்குப் பின்னரான இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கட்டிலில் ஏறியதில் இருந்து, தமிழ்த் தேசியக் கட்சிகள் முற்றுமுழுதாக ஒரு மந்தமான மௌனத்திற்குள் மூழ்கியுள்ளன.
சர்வதேச விசாரணைப் பொறிமுறையான ‘ஒஸ்லாப்’ தனது கால அவகாசத்தை 2027 இல் நிறைவு செய்யவுள்ள பின்னணியில், அதற்குப் பின்னரேனும் இனஅழிப்பு விசாரணையையோ அல்லது ஆகக்குறைந்தபட்சம் போர்க்குற்ற விசாரணையையோ முன்னெடுக்க வேண்டும் என்ற எவ்வித தார்மீகக் கோரிக்கையையும் தமிழ்க் கட்சிகள் இன்றுவரை சர்வதேச அரங்கில் வலிந்து முன்வைக்கவில்லை.
அதேவேளை, தமிழ்க் கத்தோலிக்கத் திருஅவையின் தற்போதைய ஆயர்களும் தங்களை வெறும் சமய – ஆன்மீகப் பணிகளுக்குள் மாத்திரமே முடக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த ஆன்மீகக் கூட்டுக்குள்ளிருந்து எழாத மௌனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஒரு அரசியல் நயவஞ்சக உத்தியைத் தமிழ்க் கத்தோலிக்கத் திருஅவையிடம் விதைக்க ஆரம்பித்துள்ளார்.
“இலங்கையின் ஒற்றையாட்சி (Unitary State) கட்டமைப்புக்குள்ளேயே தமிழர்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்ற அந்த நச்சுத்தன்மை வாய்ந்த உத்தியானது, ஈழத்தமிழர்களின் தசாப்தகால சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் ஆன்மாவையும், ஆயர் இராயப்பு ஜோசப் போன்ற ஆளுமைகள் சிந்திய வியர்வையையும் முற்றாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நர்வை மல்கம் ரஞ்சித் முன்னெடுக்கிறார்.
பேராயர் கர்தினால் மல்கம், கத்தோலிக்கத் திருஅவையின் அதிஉயர் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதிலும், ஒரு சாதாரண சிங்களக் குடிமகனின் உணர்வோடு தனது இனம் சார்ந்து நின்றே இராஜதந்திரமாகக் காய்நகர்த்துகிறார்.
சமய எல்லைகளைக் கடந்து, இலங்கைத் தேசிய இன அடையாளத்தின் பின்னணியில் நின்று தனது மக்களின் நீதிக்காகப் போராட கத்தோலிக்க திருஅவையின் நெறிமுறைகளும் பேராயருக்கு இடமளிக்கவே செய்கின்றன.
ஆகேவே, தற்போதைய சிக்கலான இந்தோ-பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் சூழலிலும், ஈழத்தமிழர் தரப்பிலிருந்து இழந்த உரிமைகளை மீட்டெடுக்க கூட்டு முயற்சிகள் அவசியமாகின்றன.
குறிப்பாக, 2021 ஜனவரி மாதத்தில், ஈழத்தமிழர்களின் ‘கூட்டுரிமை’ (Collective Rights) மற்றும் சர்வதேசப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, எம்.ஏ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட முரண்பட்டுக் கிடந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைப் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒன்றிணைத்துக் கூட்டு வரைபொன்றை உருவாக்கிய வரலாற்றுச் சூழல் மீளெழுச்சி பெற வேண்டும்.
சிவில் சமூகச் செயற்பாட்டாளர் வி.எஸ். சிவகரன், அன்று நிலவிய கடும் விமர்சனங்களையும் தனிநபர் காழ்ப்புணர்வுகளையும் எதிர்கொண்டு கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார்.
எனவே, 2024 ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் புதிய அரசியல் சூழலும், உலக வல்லரசுகளின் வியூகங்களுக்குள் இலங்கைத் தீவு சிக்கியிருக்கும் இன்றைய உலக அரசியல் ஒழுங்கும், தமிழர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை உணர்த்துகின்றன.
வெறும் தேர்தல் மையக் கட்சி அரசியலால் மாத்திரம் இனிமேல் சர்வதேச அரங்கில் பேரம்பேச முடியாது.
எனவே, தற்காலப் புவிசார் அரசியல் சவால்களை ஆழமாகக் கிரகித்து, கடுமையான எதிர் விமர்சனங்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆரோக்கியமான மாற்று அரசியலை வழிநடத்தக்கூடிய தீர்க்கதரிசனமிக்க சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும், சமயப் பெரியார்களும் மீண்டும் மக்கள் மத்தியிலிருந்து எழுந்து வர வேண்டும்.
இதுவே, இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
அதேநேரம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் ஒன்றை நிறுவி அதன் தலைவராகச் செயற்படும் திருகோணமலை ஆயர் இம்மானுவல், சைவ சமயப் பெரியார்களையும் ஒன்றினைத்து இணைத்து குறைந்த பட்சமேனும் செயற்படுவதையும், இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்..
பிற்குறிப்பு
— — —
லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமை போன்ற தென்னிலங்கையின் சிங்கள ஊடகவியலாளர்கள் சார்ந்த சம்பவங்கள் மீதான விசாரணைகள் மட்டுமே ஓரளவிற்காவது நீதி விசாரணையின் கவனத்தைப் பெற்றுள்ளன.
ஆனால், போர்க் காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் நிமலா ராஜன், சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும் தமிழ் ஊடக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் குறித்த விசாரணைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தொடர்ந்தும் “தண்டனையிலிருந்து விலக்களிக்கும்” (Impunity) கலாசாரமே பேணப்பட்டு வருகின்றது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
