சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு ஒரு சிறந்த கலை மேடையை உருவாக்கி, அவர்களின் திறமைகளை சமூகத்திற்கும் வெளி உலகிற்கும் கொண்டு செல்லும் நோக்கில், சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜெகநாதன் Foundation ஏற்பாடு செய்த “Talent Show 2026” நிகழ்வு 2026 செப்டம்பர் 26ஆம் திகதி வத்தளையில் சிறப்பாக நடைபெற்றது.
பல சிறார்கள் தங்களது பல்வேறு திறமைகளை இந்நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தியதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் மனித உரிமை ஆணைக்குழுவினால் சான்றிதழ்களும் பதக்கங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறார்களை ஊக்கப்படுத்தினார். அமைச்சக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள், தொழிலதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆதவன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின்( மலையக தேவா) ஆதரவுடனும் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சமூக செயற்பாட்டாளரும் தேசபந்து சமாதான நீதவானுமான (JP) ஜெகநாதன் புஷ்பராணி அவர்களின் முன்னெடுப்பில், 2014ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சமூக சேவைப் பணிகளின் தொடர்ச்சியாக ஜெகநாதன் Foundation பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்ப காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், தேவையுடையவர்களுக்கு உதவுதல், கோவில் சார்ந்த சமூகப் பணிகள் மற்றும் அன்னதானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கும் நடத்தப்பட்டதுடன், பரீட்சைக்குத் தேவையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கல்வி, சிறார்களின் திறன் வளர்ச்சி மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஜெகநாதன் Foundation சமூகப் பணிகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என Foundation சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
