இலங்கையில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசும் தனது காவியுடையினை கழற்றவில்லையென பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் ஞானசார தேரர் விவகாரத்தில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திற்கமையவே சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது 63 பௌத்த பிட்சுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், ஞானசார தேரருக்கும் மற்றவர்களைப் போன்றே உரிய முறையில் நடத்துமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறு வருட காலச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் சாதாரணக் கைதிகளுக்குரிய சீருடைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஞானசார தேரரின் சீருடையைக் கழற்ற வேண்டாமென்றும், அவரைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமான பிக்கு சீருடையான பீதாம்பரத்தை (காவியுடை) அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அனுநாயக்க மாநாயக்க தேரர் கொட்டப்பிட்டியே ராகுல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு பிக்குவின் சீருடையை (உடையை) அகற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிக்குவிற்கும் அவர் சார்ந்திருக்கும் மகா சங்கசபைக்கு மட்டுமே உரித்தானது.
சிறைச்சாலையில் பிக்குவின் உடை அகற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் மகா சங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
