1994 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18-ந்திகதி, வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் முல்லைத்தீவுப் பக்கமிருந்து வந்த கடற்படை பீரங்கிப் படகொன்று தொடுவாய் வாய்க்கால் கடற்பரப்பில் கரைக்குமிக அண்மையில் கட்டுமரங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது கண்டபடி துப்பாக்கிப் பீரங்கி வேட்டுகளை மாறி மாறி தீர்க்கின்றது.
ஓரிரு நிமிடங்களில் பத்து பேரின் உயிர்கள் அவ்விடத்திலேயே பிரிந்தன.
கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி இராணுவ நடவடிக்கை காரணமாக, 1991-ம்ஆண்டு ஆடி மாதம் 14ந் திகதியன்று இடம்பெயர்ந்த கட்டைக்காடு கிராம மக்கள் இராணுவ முகாமிலிருந்து சுமார் 5 மைல் தூரத்திலுள்ள தொடுவாய் வாய்க்கால், பூனைத்தொடுவாய், சுண்டிக்குளம் என கடற்கரையோரக் கிராமங்களில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வந்தனர்.
இக்குடும்பங்களில் இருந்து கடலுக்குச் சென்ற பத்துப் பேரே கடற்படையின் துப்பாக்கிச்ச சூட்டில் உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற தினம் அதிகாலை கடலுக்குச் சென்று கடலில் வலையை விரித்தபின் சில மணி நேரத்தில் தமக்கு நடக்கப் போவதை அறியாது சற்று உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளை அதிகாலை 6 மணி போல் கரையிலிருந்து விசில் சத்தம் கேட்கிறது. திடுக்கிட்டு விழித்தவர்கள், கடலை அவதானித்தவேளை முல்லைத்தீவுப் பக்கமிருந்து கரும்புள்ளி போன்றதொன்று தெரிவதைக் கண்டு, அது கடற்படையின் பீரங்கிப் படகு தான் என எண்ணி, கட்டுமரத்தில் பிணைத்திருந்த வலைகைளை அவிழ்த்துவிட்டு அனைத்து கட்டுமரங்களிலும் இருந்தவர்களும் கரையை நோக்கி சவள் பலகையால் மிகவேகமாக வலிக்கின்றனர்.
ஆனால் அவர்கள் நினைத்ததுபோலல்லாமல் ஒரிரு நிமிடங்களில் பீரங்கிப் படகு இவர்களுக்குக் கிட்ட நெருங்கி வந்து, துப்பாக்கி, பீரங்கி வேட்டுகளை மாறி மாறி தீர்க்கின்றது. ஐந்து கட்டுமரங்களும் அவைகளிலிருந்த பத்துப் பேரும் பீரங்கிப் படகிற்கு மிகக் கிட்டிய தூரத்தில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மற்றைய கட்டுமரங்களில் இருந்தவர்கள் மிகுந்த சிரமத்துடன் கரையை அண்மித்து கடலில் நடப்பதை அவதானிக்கின்றனர். தப்பி வந்தவர்களில் யார் வந்துள்ளார்கள் என கரையிலிருந்தோர் பார்த்து கரை சேராதவர்களின் உறவினர்கள் கத்தி அழுகின்றனர்.
இந்நேரத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடற்கரையில் நின்றிருந்த தொடுவாய் வாய்க்கால் கிராம மக்கள் முழுப்பேரும் இறந்தவர்களின் மனைவியர், குழந்தைகள், பெற்றோர், சகோதரர், உறவினர் அகப் பட்டவர்களுக்கு என்ன நடக் கப்போகிறது என்பதை அவதானித்த வண்ணம் ஆண்டவனை பிரார்த்தித்தனர்.
கட்டுமரத்தில் நின்ற பத்துப் பேரும் எழுந்து நின்றும் கட்டுமரத்திலேயே முழங்காலில் இருந்தும் தங்களை “சுட வேண்டாம்” என கும்பிட்ட வேளையில் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடுபட்டு அந்தோனிப்பிள்ளை இயக்கோப்பிள்ளை, அவரின் மகன் நிக்ஷன் ஆகியோர் கடலில் விழுகின்றனர்.
தொடர்ந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப் படுகின்றன.சகோதரர்களான யேசுராசா சாந்தகுமார், யேசுராசா ஜெயறஞ்சன் ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து அமிர்தநாயகம் யோண்பெர்னாண்டோ, கபிரியேல்பிள்ளை யேசுதாஸ், ஆசீர்வாதம் வில்சேந்தி மருசலின் பலகையால் மிக வேகமாக வாதம் வில்சேந்தி மருசலீன், மனுவேற்பிள்ளை மரியசீலன், கபிரியேற்பிள்ளை அருள்ஞானசீலன், சிவகிருபைலிங்கம் கணேசலிங்கம் ஆகியோர் சூடு பட்டு விழுகின்றனர்.
கடற்படை பீரங்கிப் படகு தமது வேட்டையை நடாத்தி முடித்தபின் கடலில் நின்ற கட்டுமரங்களை ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு மேற்குப் பக்கமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணி இராணுவ முகாமை நோக்கி செல்லுகிறது.
கடற்கரையில் ஊரே கூடிவிட்டது. எங்கும் மரண ஓலமும் ஒப்பாரியும். ஓரிரு நிமிடங்களில் 5 இளம் பெண்கள் விதவையாக்கப்பட்டனர். பல குழந்தைகள் தந்தையரை இழந்தனர். பெற்றோர் பிள்ளைகளைப் பிரிந்தனர். பீரங்கிப் படகு சென்று சுமார் 5 நிமிடங்கள் கடந்திருக்கும் கரையிலிருந்து கட்டுமரங்களில் சம்பவம் நடைபெற்ற கடற்பகுதிக்கு சென்றவர்கள், கட்டுமரங்களில் உயிரற்று, வயிறு பிளந்த நிலையில் கிடந்த அமிர்தநாயகம் யோண்பெர்னாண்டோ, யேசுராசா சாந்தகுமார் ஆகியோரின் உயிரற்ற உடல்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றனர்.
மற்றைய எட்டுப் பேரினது உடல்களும் கடல் நீருள் அமிழ்ந்து போய்விட்டன. இருவரினது ஈமக்கிரியைகளும் அன்று மாலையே நடைபெற்றது.
மற்றைய எட்டுப் பேரினது சடலங்களை கடலிலும், கடலிலும் கரையிலும் தேடும் பணி இரவு பகலாக நடைபெற்றது. மறுநாள் 19ந்திகதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் முதலாவது சடலம் கடலில் மிதந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கிடையில் 7 சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கரையொதுங்கின. ஒரு சடலம் மட்டும் கரை ஒதுங்காது நீரோட்டத்துடன் இழுபட்டு கட்டைக்காடு- வெற்றிலைக்கேணி இராணுவ முகாம் பகுதிக்கு சென்றுவிட்டது. கரையொதுங்கிய சடலங்களில் சில அடையாளம் காணப்படாத நிலையிலேயே உறவினர்களாலும், ஊரவர்களாலும் அன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அ.ஸ்ரனிஸ்லாஸ்
ஈழநாடு – 22.10.1995
