யேர்மனியின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், பவேரியா மாநிலத்தின் பொருளாதார அமைச்சருமான 55 வயதுடைய ஹூபர்ட் ஐவாங்கர், தலைநகர் பெர்லினில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெர்லின்-மிட்டே மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தலைநகர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான குறிப்பிட்ட காரணம் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிவதுடன், இந்தச் சம்பவத்தில் மூன்றாம் தரப்பினருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரித்து வருவதாகக் காவல்துறையும் அரசு வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர வாக்காளர்கள் கட்சியின் (Free Voters) தலைவராகவும், பவேரியா மாநிலத்தின் பொருளாதார அமைச்சராகவும் பணியாற்றிய ஐவாங்கர், கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பெர்லினுக்குச் சென்றிருந்தார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்று ஜெர்மனியின் பில்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்குப் பவேரியா மாநில முதலமைச்சர் மார்கஸ் சோடர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முழுமையான துயரம். நாங்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். தற்போது எங்களது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடனேயே உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மார்கஸ் சோடர் தலைமையிலான பவேரியா மாநில அரசில், ஐவாங்கரின் சுதந்திர வாக்காளர்கள் கட்சி கூட்டணிக் கட்சியாக இடம்பெற்றிருந்தது. 2006ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் பவேரியா மாநிலப் பிரிவுக்குத் தலைமை வகித்து வந்த அவர், 2018ஆம் ஆண்டு அக்கட்சியை முதன்முறையாக மாநில அரசில் இடம்பெறச் செய்ததில் முக்கியப் பங்காற்றினார்.
இதற்கிடையே, 2023ஆம் ஆண்டு அவரது பள்ளிப் பருவத்தில் நாஜி ஆதரவு துண்டுப் பிரசுரங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக அவர் தேசிய அளவில் விவாதத்திற்கு உள்ளானார். அந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்டிருந்தாலும், தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்திருந்தார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஐவாங்கரின் திடீர் மரணம் ஜெர்மனி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் காவல்துறை விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
