மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகிய அரசியல் அமைப்புகளின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்த அனுர குமார திசாநாயக்க,1997ம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிலும் இடம்பிடித்தார்.
1998ம் ஆண்டு கட்சியின் அரசியல் குழுவிலும் உறுப்பினரானார். 1999ம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
2000ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடாக முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி இணைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.
அதே ஆண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவியேற்றார்.
