மே 18 ஈழத்தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் நாள். 30 ஆண்டுகால யுத்தம் வல்லரசுகளின் துணையுடன் மௌனமாக்கப்பட்ட நாள். உலகம் எமது விடுதலைப் போராட்டத்தை தோல்வியடைந்த ஓர் இனத்தின் போராட்டமாக முத்திரைக் குத்திய நாள். ஆனால் நாம் எங்கே விழுந்தோமோ, அங்கேயே மீண்டும் எழுந்து நிற்கும் வலிமையை மே 18 வருடந்தோறும் எமக்குள் விதைக்கிறது. மே 18 என்பது ஈழத்தமிழர்களின் பாஸ்கா. அது வருடந்தோறும் நினைவுகூரப்பட்டு, எம் இனத்தின் விடுதலையே எமது இலக்கு என்பதனை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் ஒரு நாள்.
பாஸ்கா என்பது யூத மக்களின் வரலாற்றிலும் விசுவாசத்திலும் மிகவும் முக்கியமான ஒரு நினைவு திருநாளாகும். எகிப்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் விடுதலையை பெற்ற சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வே பாஸ்கா. இது வெறும் மதச்சடங்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீர், பசி, அச்சம், இடம்பெயர்வு, உயிர்வாழ்தல் மற்றும் விடுதலைக்கான நம்பிக்கை ஆகியவற்றின் நினைவுச் சின்னமாகும்.
எகிப்தில் பார்வோனின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேலர், பல ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன் அவசரமாக ஒரு உணவை தயார் செய்யும்படி கட்டளையிடப்பட்டனர். புளியாத அப்பம், கசப்பான கீரைகள், ஆட்டுக்குட்டி ஆகியவை அந்த உணவின் பகுதிகளாக இருந்தன. இந்த உணவு அவர்களின் துன்ப வாழ்க்கையையும் அவசர வெளியேற்றத்தையும் நினைவூட்டியது. இதனால் பாஸ்கா என்பது உணவின் வழியாக வரலாற்றை நினைவுகூறும் ஒரு அரசியல் மற்றும் ஆன்மீகச் செயற்பாடாக மாறியது.
இன்றும் யூத மக்கள் பாஸ்காவை குடும்பமாகக் கொண்டாடுகின்றனர். முன்னோர்களின் வேதனைகளை மறக்காமல் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்பது இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். “நாம் அடிமைகளாய் இருந்தோம்; ஆனால் விடுதலையடைந்தோம்” என்ற அடையாளத்தை பாஸ்கா தொடர்ந்து உயிர்ப்பித்து வருகிறது. இதனால் பாஸ்கா என்பது நினைவின் வழியாக எதிர்ப்பை கற்றுக்கொடுக்கும் ஒரு வாழ்வியல் அனுபவமாகும்.
இந்த பாஸ்கா அனுபவத்தை ஈழத் தமிழர்களின் வரலாற்றோடு இணைத்துப் பார்க்க முடியும். குறிப்பாக முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் ஈழத்தமிழர்கள் அனுபவித்த பசி, இடம்பெயர்வு, மரணம், அச்சம் மற்றும் உயிர்வாழும் போராட்டம் பாஸ்காவின் பல அடையாளங்களோடு ஒத்துப்போகின்றது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறியபோது எதிர்காலம் என்ன என்பது தெரியாத நிலையில் இருந்தார்கள். அதுபோலவே போரின் இறுதி கட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் எப்போது உயிர் பறிக்கப்படும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்தனர்.
மே 18 நினைவு கூறலில் மிக முக்கிய பங்கு வகிப்பது முள்ளிவாய்க்கால் கஞ்சி. முள்ளிவாய்க்கால் காலகட்டத்தில் “கஞ்சி” என்பது வெறும் உணவாக இருக்கவில்லை. அது உயிரைக் காப்பாற்றிய கடைசி நம்பிக்கையாக இருந்தது. போர் சூழ்நிலையில் சமையல் செய்வதற்கான நேரமோ வசதியோ மக்களிடம் இருக்கவில்லை. இடம்பெயர்வு, குண்டுவீச்சு, உணவுப் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் மக்கள் மிகவும் எளிய உணவுகளையே நம்பியிருந்தனர். அந்த நிலையில் கஞ்சி என்பது பட்டினிக்கெதிரான அமைதியான போராட்டமாக இருந்தது.
கஞ்சி தமிழர் வாழ்க்கையில் பல அர்த்தங்களை கொண்டது. ஏழைகளின் உணவு, பகிர்வின் உணவு, நோயின் போது தரப்படும் ஆறுதல் உணவு, தாய்மையின் அடையாளம் ஆகியவற்றோடு அது தொடர்புபட்டுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்காலில் கஞ்சி இன்னொரு புதிய அர்த்தத்தை பெற்றது. உயிர்வாழும் எதிர்ப்பின் அடையாளம். சமைக்க ஒன்றுமில்லாத நிலையிலும், சிறிதளவு அரிசியைக் கொண்டு பலருடன் பகிர்ந்து குடிக்கப்பட்ட கஞ்சி, “நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம்” என்ற அமைதியான அறிவிப்பாக மாறியது.
பாஸ்கா உணவு இஸ்ரவேலரின் விடுதலைப் பயணத்தை நினைவூட்டுவது போல, கஞ்சி ஈழத் தமிழர்களின் உயிர்ப்போராட்டத்தை நினைவூட்டுகிறது. இரண்டிலும் பசி இருக்கிறது. அச்சம் இருக்கிறது. இடம்பெயர்வு இருக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, உயிர்வாழ வேண்டும் என்ற உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறது.
இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த இன அழிப்பும் மனிதாபிமான நெருக்கடியும் ஈழத்தமிழர் சமூக நினைவில் ஆழமாக பதிந்திருக்கிறது. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பல குழந்தைகள் பட்டினியிலும் அச்சத்திலும் வாழ்ந்தனர். இன்று இத்தகைய அனுபவங்களை நினைவுகூர்வது வெறுப்பை வளர்ப்பதற்காக அல்ல. நடந்த உண்மையை மறக்காமல் பாதுகாப்பதற்காகவே. பாஸ்கா யூத மக்களுக்கு நினைவின் வழியாக அடையாளத்தை காத்துக்கொடுத்தது போல, முள்ளிவாய்க்கால் நினைவும் ஈழத் தமிழர்களின் வரலாற்றையும் வேதனையையும் உயிர்ப்பித்து வருகிறது.
ஆகவே, பாஸ்காவும் ஈழத் தமிழர்களின் அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை புரிந்துகொள்ள ஒரு ஆழமான வாய்ப்பை வழங்குகின்றன. விடுதலை என்பது அரசியல் நிகழ்வு மட்டுமல்ல் அது நினைவின், எதிர்ப்பின், உயிர்வாழ்தலின், நம்பிக்கையின் பயணமாகும். கஞ்சி போன்ற எளிய உணவுகள்கூட ஒரு மக்களின் வரலாற்று சாட்சியாக மாறக்கூடும் என்பதை இந்த அனுபவங்கள் நமக்குக் கற்றுத்தருகின்றன.
அருட்பணி.ம.லூக்ஜோன்
மனித உரிமை செயற்பாட்டாளர் மட்டக்களப்பு
