இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள RAF ஃபேர்ஃபோர்டு விமானப்படைத் தளத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அங்கிருந்த அமெரிக்காவின் அனைத்து B-1 குண்டுவீச்சு விமானங்களும் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளன.
சுமார் 12 B-1 விமானங்கள் தளத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள தங்களது சொந்தத் தளங்களுக்கு திரும்பியுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கான காரணத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
புவியியல் காண்
செப்டம்பர் 27 அன்று RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகே மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் காணப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஐந்து பிரிட்டிஷ் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, லண்டனில் மேலும் ஒருவர் பயங்கரவாதச் செயலுக்குத் தயாரானதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
RAF ஃபேர்ஃபோர்டுக்கு எதிராக ஈரான் ஆதரவு சதித்திட்டம் தொடர்பாக அமெரிக்கத் தளபதிகளுக்கு புதிய அச்சுறுத்தல் தகவல்கள் கிடைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துடன் அமெரிக்காவின் விமானங்களைத் திரும்பப் பெறும் முடிவுக்கு தொடர்பு இருப்பதை பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்கள் முற்றாக மறுக்கவில்லை. இருப்பினும், இது அரசியல் முடிவு அல்ல என்றும், அமெரிக்க இராணுவத்தின் செயல்பாட்டு மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RAF ஃபேர்ஃபோர்டு பல ஆண்டுகளாக அமெரிக்க விமானப்படையின் முக்கியமான முன்னணி தளமாக இருந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் B-1 மற்றும் B-52 குண்டுவீச்சு விமானங்கள் இத்தளத்திலிருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருந்தன.
ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் RAF ஃபேர்ஃபோர்டின் முக்கியத்துவம் அதிகரித்திருந்த நிலையில், அத்தளத்திலிருந்து குண்டுவீச்சு விமானங்கள் அகற்றப்படுவது ஐரோப்பாவில் அமெரிக்காவின் நீண்ட தூர குண்டுவீச்சுத் திறனில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், RAF ஃபேர்ஃபோர்டு போன்ற ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் தளங்கள் தங்களது படைகளுக்கு சட்டபூர்வமான இலக்குகள் என ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. எனினும், RAF ஃபேர்ஃபோர்டில் நடந்த சம்பவத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரான் மறுத்துள்ளது.
