மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தாய் ஒருவரும் அவரது வயதுவந்த மகளும் கிரிஸ்லி கரடிகளின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், நான்கு கரடிகளுக்கும் தொடர்பிருப்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெண் கரடியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 48 வயதான ஜென்னி பால்கரஸ் மற்றும் அவரது 20 வயதான மகள் சேலா ரீட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையில், தாய் கரடியும் அதன் மூன்று ஓராண்டுக் குட்டிகளுமே இருவரின் மரணத்திற்கும் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசாரணை அதிகாரி ஜெஃப் டயர், கரடிகளின் வேட்டையாடும் இயல்புடன் தொடர்புடைய தாக்குதலாக இது இருந்திருக்கலாம் என்றும், இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்றும் தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் நடந்த துயரச் சம்பவம்
வான்கூவர் நகருக்கு வடக்கே சுமார் 1,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெல்லா கூலா என்ற தொலைதூரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜென்னி பால்கரஸும் அவரது மகள் சேலா ரீடும் தமது வீட்டிற்கு அருகில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே கரடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பின்னர், நடைபாதைக்கு அருகில் சுமார் 150 மீற்றர் இடைவெளியில் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
சேலா ரீட் வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தனது சகோதரியுடன் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். அன்றைய தினம் அவர் அந்த அழைப்பில் கலந்துகொள்ளாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையிலேயே இருவரும் உயிரிழந்தமை தெரியவந்தது.
முன்னைய கரடித் தாக்குதலுடன் தொடர்பில்லை
இதே பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற மற்றொரு கிரிஸ்லி கரடித் தாக்குதலுக்கும் தற்போது கொல்லப்பட்ட நான்கு கரடிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
எனினும், முந்தைய தாக்குதலுக்கும் இந்த நான்கு கரடிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை விசாரணையாளர்கள் நிராகரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற அந்தத் தாக்குதலில், சுமார் 20 தொடக்கப் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட குழுவொன்றின் மீது கரடி தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்தக் குழுவினர் நுக்சால்க் பழங்குடிச் சமூகத்தினால் நிர்வகிக்கப்படும் அக்வாசல்க்டா பாடசாலையைச் சேர்ந்தவர்கள்.
மீண்டும் அதிர்ச்சியில் பழங்குடிச் சமூகம்
கடந்த ஆண்டு இடம்பெற்ற கரடித் தாக்குதலின் பாதிப்பிலிருந்து தமது சமூகம் இன்னும் முழுமையாக மீளவில்லை என நுக்சால்க் சமூகத்தின் தெரிவுசெய்யப்பட்ட தலைமைக்குழு உறுப்பினர் த்லம்திமுத் சாமுவேல் ஸ்கூனர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சமூக உறுப்பினர்களிடையே மீண்டும் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள், கனடாவின் தொலைதூரப் பகுதிகளில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான பாதுகாப்பான வாழ்விட எல்லைகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளன.
