தனது பிறந்தநாளை சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட எண்ணிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் நடன ஆசிரியை அருணாசலம் கேதுஷா, மண் பானை மீது ஏறி நின்று இடைவிடாது நடனமாடி புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
இந்த அரிய சாதனை நிகழ்வு, நேற்றைய தினம் வியாழக்கிழமை (02.07.2026) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய கலை வடிவங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், இளையோர் மத்தியில் கலை ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இந்த சவாலான முயற்சியை அவர் முன்னெடுத்திருந்தார்.
ஒரு சாதாரண மண் பானையின் மீது ஏறி நின்ற கேதுஷா, தனது உடல் சமநிலையைத் துல்லியமாகப் பேணியவாறு, சுமார் 1 மணித்தியாலம் 6 நிமிடங்கள் இடைவிடாது நடனமாடினார். மிகவும் கடினமான இந்த முயற்சியை எவ்வித தளர்ச்சியுமின்றி, மிகுந்த அர்ப்பணிப்புடனும் புன்னகையுடனும் அவர் செய்து முடித்தது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், சட்டத்தரணி சரணியா, அன்னையின் கரங்கள் ஸ்தாபகர் ஏரம்பு அன்னலட்சுமி, சுசேந்தன் அடிகளார், வைத்திய கலாநிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டு கேதுஷாவின் சாதனையை நேரில் கண்டு களித்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் கருத்து தெரிவிக்கையில், “பிறந்தநாளை வெறும் கேக் வெட்டி கொண்டாடுவதோடு நிறுத்தாமல், தனது கலைத் திறமையால் கிளிநொச்சி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் கேதுஷா.
இவரது இந்த முயற்சி இளம் தலைமுறையினருக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது” எனப் புகழாரம் சூட்டினர்.
தனது பிறந்தநாளை ஒரு வரலாற்றுச் சாதனையாக மாற்றிய இளம் நடன ஆசிரியை அருணாசலம் கேதுஷாவிற்கு, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இவரது கலைப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொட நாமும் வாழ்த்துகிறோம்.
