ஞானசார தேரரிற்கு காவியுடை கழற்றப்பட்ட விவகாரம் அனுர அரசிற்கு பௌத்த மத பீடங்களிலிருந்து அழுத்தங்களை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில்டி பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, புதிய நிலையான கட்டளைகளை உருவாக்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.
மகா சங்கத்தினருடன் இன்று வியாழக்கிழமை (8) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இலங்கை ஜனாதிபதி அதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்திகள்
சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்படவுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, தேவையான சட்டத் திருத்தங்களை முன்வைக்குமாறு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிக்குகளை சிறைச்சாலைகளில் இருந்து நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது காவி உடை அணிய அனுமதிக்கப்படாமை தொடர்பில் மகா சங்கத்தினர் எழுப்பிய கவலைகளையடுத்தே அனுரவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பொதுவான கைதிகளை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன . “சட்டம் காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டால், உரிய முறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே சரியான வழியாகும். தனிப்பட்ட நபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்து சட்டத்தை மாற்ற நான் விரும்பவில்லை” .
எனவே, பிக்குகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் முறை மற்றும் அவர்களை வெளியில் அழைத்துச் செல்லும் நடைமுறைகள் தொடர்பில், ஒருவரை இலக்காகக் கொள்ளாமல், அனைவருக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வண. கலகொடஅத்தே ஞானசார தேரரை காவி உடையின்றி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் எதிர்காலத்தில் அதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பிலும் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறைகளில் பாலியல் வன்புணர்வு போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பௌத்த பிக்குகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
