தான் நேசித்த மக்களுக்காக தனது வாழ் நாள் முளுவதுமே அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட ஓர் மகத்தான மனிதனாக வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கத்தின் மறைவையடுத்து, தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இரங்கல் செய்தியில்,
5 தசாப்தங்களுக்கு மேலாக அடக்குமுறைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்த குரல் மௌனமாகியது. அமரர் யோதிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது.
தனது பதின்ம வயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இன அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சமரசத்திற்கு இடமின்றி ஓங்கி ஒலித்த குரல் இன்று அடங்கிவிட்டது.
தான் நேசித்த மக்களுக்காக தனது வாழ் நாள் முளுவதுமே அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட ஓர் மகத்தான மனிதனாக வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் அமரர் யோதிலிங்கம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த பாசத்தோடு குடும்ப உறுப்பினர் போன்று பழகும் அந்த சிரித்த முகத்தை நாம் மீண்டும் காணமுடியாதவாறு காலன் அவரை கொண்டு சென்றுவிட்டான்.
நான் பல சவால்களையும் அரசியல் சதிகளையும் எதிர்கொண்ட போது ஆறுதல் தந்து உந்துதல் தந்து என்னை உற்சாகப்படுத்தி உறுதுணையாக நின்று பல விமர்சனங்களையும் எதிர்கொண்ட அந்த மாமனிதனை நான் இழந்து நிற்கின்றேன்.
தனது இறுதி மூச்சு வரை எந்த எதிர்பார்ப்புமின்றி எந்த சமரசமும் இன்றி தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக அயராது சிந்தித்த தெருத்தெருவாக போராடிய தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஓர் அற்புதமான பிறவி இன்று எம்முடன் இல்லை.
தமிழ் தேசியம் என்று தான் ஆழமாக காதலித்த ஒற்றை இலட்சியத்தற்காக தன் குடும்பத்தையே பிரிந்து தனது இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர்.
நல்ல மனிதனாக நல்ல குடும்ப தலைவனாக நல்ல ஆசிரியனாக நல்ல சட்டத்தரணியாக புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளனாக ஓர் அரசியல் களப்போராளியாக பல அவதாரங்களை எடுத்த அந்த சத்தியவீரன் சரித்திரமாகிவிட்டான்.
அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் ஈடு இணையற்ற பேரிழப்பாகும். சத்திய இலட்சியத்தை தம் வாழ்வாக வரித்துக்கொண்டவர்களை சாவு அழித்துவிடுவது கிடையாது. அந்த மகத்தான மனிதன் எம் ஆன்மாவில் கலந்து எம்மை வழிகாட்டி நிற்பான்
நாம் அவருக்கு செய்யும் உயர்ந்த மரியாதை என்பது அவர் எந்த இலட்சியத்திற்காக வாழ்ந்தாரோ எந்த இலட்சியத்தை ஆழமாக நேசித்தாரோ அந்த இலட்சியத்தை ஓய்வின்றி போராடி வென்றெடுப்பது மட்டும் தான்.
அன்னாருக்கு தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் புகழ் அஞ்சலிகளை செலுத்துகின்றோம். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
