யாழ்ப்பாணத்தில் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள நபரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை உடனடியாக முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுற்றுலாப்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களிடம் தலா பல இலட்சம் ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாது ஏமாற்றிப் பாரிய நிதி மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளார்.
பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட நபர்கள், காவல் நிலையத்தில் தனித்தனியாகப் பல முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர். முறைப்பாடுகளின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது, பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவானார்.
இவ்விவகாரம் தொடர்பில் காவற்துறையினரால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசேட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாகியுள்ள குறித்த நபருக்கு எதிராக நீதிமன்றம் முன்னதாகத் திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாகியும் குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கண்டறியப்படாத நிலையிலேயே இவ்வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரின் அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் சட்டரீதியாக முடக்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ்ப்பாணக் காவற்துறையினருக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது
