கிளிநொச்சி மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதலிடத்திலுள்ள மாவட்டமாகும்.எனினும் அதிகார மட்டத்தில் கதிரைகளை தக்கவைப்பதே போராட்டமாவுள்ளது .இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள முதலீட்டாளர்களுக்குக் காணிகளை ஒதுக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், திணைக்களங்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல்துறை குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் கௌதாரிமுனையில் சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்காக இன்று (27.09.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
கௌதாரிமுனைப் பிரதேசத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக 56 பேர் தமது திட்டங்களைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அவர்களில் 46 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றிருந்தனர். அவர்களில் 34 பேர் தமது திட்டங்களுக்கான நிதிக்கூற்றுக்களையும் சமர்ப்பித்திருந்தனர்.
முன்னதாக, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோது, அப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டமொன்றைத் தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய தயாரிக்கப்பட்ட திட்ட வரைபடம் இன்றைய கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் கௌதாரிமுனைப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, முதலீடுகளுக்கான காணி ஒதுக்கீடு, நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் தாமதங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. இப்பிரதேசத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
இதன்போது முதலீட்டாளர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்கள், குறிப்பாக நடைமுறைத் தாமதங்கள் உள்ளிட்ட விடயங்களை எடுத்துரைத்தனர்.
இதற்கு பதிலளித்த கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முதலீட்டுக்காகக் குறித்த காணிகள் நில அளவை செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும், எந்த முதலீட்டாளருக்கு எந்தப் பகுதியில் எவ்வளவு காணி வழங்குவது என்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான தீர்மானமே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, துறைசார் அரச நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குக் காணி வழங்கும் செயன்முறையை எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கௌதாரிமுனை பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காணி ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதற்கான முக்கியமான அடுத்தகட்ட நடவடிக்கையாக இத்தீர்மானம் அமைந்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், பூநகரி பிரதேச செயலர், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பூநகரி பிரதேச சபையின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
