ஈழத்து இலக்கியப் பரப்பில் புற்றீசல்களாகக் கிளம்பும் கவிதை நூல்களும், அதற்கடுத்தாற் போல் சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும் வெளிவருமளவிற்கு திறனாய்வு நூல்களின் வருகை குறைவென்பது தெரிந்ததே. அதிலும் நேர்காணல் நூல்கள் வருவதில்லை என்றே கூறிவிடலாம்.
மேற்கூற்றைத் தகர்த்தெறியுமாற் போல் இவ்வருடம் இரு நேர்காணல் நூல்கள் வெளியீடு கண்டுள்ளன. சிரேஷ்ட எழுத்தாளர் யேசுராசா அவர்களின் ‘தம்பியைப் பேச விடுங்க ’ என்ற நூல் ஜீவநதி வெளியீடாகவும், பொன். ஐங்கரநேசன் அவர்களின் ‘வேர்முகங்கள் ’ நூல் எங்கட புத்தகங்கள்வெளியீடாகவும் அரங்கேறியுள்ளன.
ஐங்கரநேசன் அவர்களின் ‘வேர்முகங்கள்’ மொத்தம் இருபது ஆளுமைகளின் நேர்காணல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் ஒன்பது ஈழத்து இலக்கியவாதிகளும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பதினொருவரும் அடங்குவர்.1999 முதல் 2007 வரையிலான காலவரையறைக்குள், வடக்கில் உள்நாட்டுப் போர் உக்கிரமாயிருந்த காலகட்டத்தில், தினக்குரல், தாமரை, புதிய பார்வை, வெளிச்சம் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளி வந்தவை அவை. இதில் நேர்காணப்பட்டவர்களில் பதினொருவர் இன்று இவ்வுலகில் இல்லை. காலந்தாழ்த்தி நூலுருப் பெற்றாலும் கூட அரசியல், கலை, இலக்கியம், ஊடகம் சார்ந்த கருத்துகளும், அனுபவங்களும் முக்காலத்திற்கும் பொருந்துவனவாய் அமைந்தமை இந்நூலின் சிறப்பு.
இதில் ஈழத்து இலக்கியவாதிகள் என்று எடுத்துக் கொண்டால் எனக்குப் பரிச்சயமானவர்கள், தெரிந்தவர் எனப் பார்த்தால் இந்த ஒன்பது ஆளுமைகளில் மூவர் மட்டுமே. பேராசிரியர் மௌனகுரு, செங்கைஆழியான், புதுவை இரத்தினதுரை ஆகியோராவார். அதுபோல் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெயகாந்தன் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் மட்டுமே.
நேரடியாக மனிதரோடு உறவாடும் உணர்வு சினிமாவில் அல்ல நாடகம், கூத்துக்களில் மட்டுமே என்று கூறும் மௌனகுரு அவர்கள் கூத்துக்களை மீளக் கண்டுபிடித்து நாடக வடிவில் பெரும் பங்காற்றி வருவது பற்றியும், அதிலுள்ள சவால்கள், சாதனைகள் பற்றியும் நேர்காணலில் அறியக்கிடக்கிறன.
அதே போல் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப் பாதையில் தவிர்க்க முடியாத ஒரு தனிநபர் செங்கைஆழியான் அவர்கள். நாவல்கள், சிறுகதைகள் என்பதோடு மட்டுமல்லாமல் புவியியல், அறிவியல் துறைகளிலும் தன் பங்களிப்பை நல்கியவர். இவரது நாவல் ஒன்று திரைப்படமாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. அரச நிர்வாகத் துறையில் பல பதவிகளை அலங்கரித்தவர். ஆறு தடவை அரச சாகித்திய விருதினைப் பெற்றவர். பல விடயங்கள் அவருடனான நேர்காணலில் அலசப்பட்டுள்ளன. சில முரண்களும் இல்லாமலில்லை.1999 இல் இடம்பெற்ற இந்நேர்காணலில் இன்னும் பத்துப், பதினைந்து வருடங்களே புலம்பெயர் இலக்கியத்தின் உச்சகாலம் என்று அவர் கூறிய ஆருடம் பொய்த்து விட்டது. அது போல் கொலம்பஸ் அமெரிக்கவைக் கண்டுபிடித்தது அபத்தம், அது ஏற்கனவே இருந்த ஒன்று என்றார். இப்பிரச்சனை தமிழில் தான். ஆங்கிலத்தில் இருப்பதைக் கண்டு பிடிப்பதை discovery என்றும், புதிதாக ஒன்றை உருவாக்குவதை invention என்றும் கூறுகிறார்கள். தமிழில் எல்லாமே கண்டுபிடிப்புத்தான்.
மேற்கூறிய இரு ஆளுமைகளை நினைக்கும் தோறும் யாவராயினும் முகத்தில் சிரிப்பு மாறாமல் கதைக்கும் அவர்களின் இனிய சுபாவம் நினைவில் வருகிறது.
இதில் அடுத்து வருபவர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் பயணத்தில் கவிதைகளை விதைத்தவர். சர்வதேச அரங்கில் அவரின் கவிதைகள் பாராட்டுப் பெற்றன. 1980 களின் ஆரம்பத்தில், காலையில் எங்கள் தெருவின் வழியே ஒரு வயது முதிர்ந்தவருடன் இவர் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். நேர்காணலில் தன் சித்தப்பாவுடன் திருநெல்வேலியில் தங்கியிருந்ததாக அவர் கூறியிருக்கிறார். நான் கடைசியாக அவரைப் பார்த்தது 1994 இல், கிளிநொச்சியில் புலிகளால் தமக்கு வலுச் (?) சேர்ப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுக்கான கூட்டத்தில்.
இவருடனான நேர்காணலின் போது இவரது கவிதை,
‘பெற்ற தாயினை எட்டி உதைப்பது
போலத் தாயகம் தீயில் எரிகையில்
விட்டு விமானத்தில் ஏறிப் பறந்தவர் வீரமில்லாதவர் நாயினும் கீழவர்‘
பற்றி ஐங்கரநேசன் அவர்கள் கேட்ட போது, அது அப்போதிருந்த மனநிலையில் எழுதியது. புலம்பெயர் தமிழர்கள் எம் போராட்டத்திற்கு உதவுகிறார்கள். இப்போது, தான் அவ்வாறு நினைக்கவில்லை என்ற பொருள் படக் கூறியிருந்தார்.
பெரும்பாலும் ஈழத்து இலக்கியவாதிகளின் நேர்காணலில் விடுதலைபோராட்டம், போராளிகள், நிதர்சனம் தொலைக்காட்சி போன்றவை மலிந்து காணப்பட்ட போதிலும் நூற்பதிப்பு, நாடகம், ஒளிப்பதிவு, திரைப்படங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தமிழக இலக்கியவாதிகளின் நேர்காணல்களில் இல்லாத கொள்கைப்பிடிப்பும், உணர்வுரீதியான வெளிப்பாடும் எம்மவர்களின் நேர்காணல்களில்
அதிகம் தென்பட்டன.
நூலை முழுவதுமாக வாசித்ததில் , நேர்காணல்களின் நீளம் மிக அதிகம். கி.பி. அரவிந்தனின் நேர்காணல் இருபத்தேழு பக்கங்களைக் கொண்டது. சில கேள்விகட்கான விடை ஒரு பக்கத்தையும் தாண்டி நீளுகின்றது. நேர்கண்டவர் ஒலிப்பதிவு செய்த பின் இவற்றை எழுத்தில் வடித்திருப்பாரோ தெரியவில்லை.
பொதுவாகவே நேர்காணல்கள் பெரும்பாலும் ஒருவரின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், சோதனைகள் இவற்றையே மையமாகக் கொண்டு சுழல்வதுடன், அவரின் நல்ல பக்கங்களை மட்டுமே வெளிக்கொணர்கின்றன. இதுவே ஒருவர் தன் சுயசரிதையை எழுதியிருப்பாராயின் தன் இருண்ட பக்கங்களையும், பலவீனங்களையும் கூட முன் வைத்திருப்பார்.
பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவரும் நேர்காணல்கள், தொலைக்காட்சி நேர்காணல்களிற்கு ஈடு கொடுக்க முடியுமா? என்கின்ற வினா எப்போதும் உண்டு. கேள்வியை விடக் காட்சிக்கு வலு அதிகம். காட்சி பாமரர்களையும் எளிதில் சென்றடைந்து விடும். படிப்பறிவு உள்ளவர்கள் எல்லோரும் வாசிப்பதில்லை என்பதும் மற்றொரு விடயம். நேர்காணலில் வெளிப்படும் உடல்மொழி, உணர்ச்சி, முகபாவம் எழுத்தில் அறியப்படுவதில்லை.
இதை எழுதும் போது உடனடியாக ஞாபகத்தில் வருவது 2025இல் அல்ஜசீரா தொலைக்காட்சியின் Head to Head நிகழ்வில் மெஹ்திஹசன், ரணில் விக்கிரமசிங்க அவர்களை நேர்கண்ட நிகழ்வு தான். Mr. Cool என்றும், Mr. Clean என்றும் கொண்டாடப்பட்ட ரனில் விக்கிரமசிங்கவின் விம்பம் அதில் சிதைவுண்டு போனது. வேகமாய்த் தன் மேல் பாய்ந்த குற்றச்சாட்டுக்கு ரணில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டதும், அதை மறைக்க don’t lose your temper என்று நேர்காண்பவரைப் பார்த்துக் கூறியதும் , I have been in politics before you were born என்று தனது அனுபவத்தையும், வயதையும் பிரகடனப்படுத்தியதும் சிரிப்பை வரவழைத்த தருணங்கள். ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கும் முன்பே பாய்ந்து வரும் கேள்விகளால் திணறிய ரணிலின் give me ten minutes to answer என்ற விண்ணப்பம் உடனடியாகவே, unfortunately we don’t have ten minutes for each question என்று மறுக்கப்பட, வயது முதிந்த ரணில் எனும் ஆளுமையும், இளவயது மெஹ்திஹசன் எனும் ஆளுமையும் மோதிக் கொண்டதில் கிடைத்த கோபம்,வேகம் இன்னும் பிற வாணவேடிக்கைகள் பத்திரிகை நேர்காணலில் கிடைக்காது.
இதே போல் தான் ஒட்டிய கன்னங்களும், வெறித்த விழிகளுமாய், கறுப்பு நிற உடையில் திரையில் தெரிந்த இளவரசி டயானாவின் நேர்காணல், ஒரு வகையில் ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்த விட, அது உலகளவில் அனுதாபத்தைத் தேடித் தந்தது. இவ் அனுதாப அலை எவ்வளவு தூரம் வீரியமாக இருந்ததென்றால் அவரின் மரணத்தின் பின் ஓரிரண்டு தினங்களில் இறந்துபோன – அல்பேனிய குடும்பத்தில் பிறந்து கொல்கத்தா சேரி மக்களுக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணித்த – எளிமையின் வடிவமான அன்னை தெரேசாவின் மரணத்தை இவ்வுலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கும் அளவில்.
தேர்தல்களை முன்னிட்டு நடைபெறும் வேட்பாளர்களுடனான நேர்காணல்களின் பின் நடைபெறும் கருத்துக்கணிப்பில் வெற்றி, தோல்விகளின் முடிவு முன்கூட்டியே சாத்தியமாகிறது.
இவை போன்ற காத்திரமான நேர்காணல்கள் ஏன் இங்கு இயலாமல் போயின என்றால் அங்கிருப்பது போல் கருத்துச் சுதந்திரமும், பாதுகாப்பும், இன்னும் பிறவும் இங்கில்லாமல் போனதுவே.
பவானி சிவகுமாரன்
