உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ச தூக்குமேடைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் . அதன் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேற கோத்தபாய முயற்சிக்கின்றார் என இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா என்பவர் தெரிவித்துள்ளார். எனினும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைக்காது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கோட்டாபய சிறைக்குச் செல்வார். நிலைமை மேலும் தீவிரமடைந்தால், அவர் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம்.
அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டம் பௌத்த மதத்தையோ புனித வழிபாட்டுத் தலங்களையோ பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுபவது அல்ல. கோட்டாபயவைச் சுற்றியுள்ள அணியினரின் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காகவேயெனவும் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தில் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக கோத்தபாய இன்று பணியகத்தில் முன்னிலையாகியிருந்தார்.
