இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் கிளைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு மாகாணத்திலும் கிளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திருட்டு, ஊழல் மற்றும் பொதுச் சொத்துக்களை வீணடிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
