ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை அன்பாலும் உறவுகளாலும் நிரம்பியிருந்தது. காலையில் விழித்தவுடன் அம்மாவின் முகத்தையும், அப்பாவின் அக்கறையையும், சகோதரர்களின் பாசத்தையும், உறவினர்களின் சிரிப்பையும் பார்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். வீட்டின் முற்றத்தில் அமர்ந்து உரையாடிய நாட்களும், ஒருவரின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட காலங்களும் இன்று வெறும் நினைவுகளாக மாறி வருகின்றன.
இன்று உங்களை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை இன்னும் உங்களிடம் இருக்கிறதா? பெரும்பாலானவர்களின் பதில் “இல்லை” என்பதாகத்தான் இருக்கும். ஏனெனில் இன்று மனித முகங்களை விட தொலைபேசி திரைகளின் முகங்களையே நாம் அதிகம் பார்க்கின்றோம். Facebook, YouTube, Instagram போன்ற சமூக ஊடகங்கள் எமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மட்டுமல்ல, வாழ்க்கையையே ஆக்கிரமித்துவிட்டன.
ஒவ்வொரு நாளும் ஐந்து, ஆறு, ஏழு, எட்டு மணித்தியாலங்களை கூட பலர் தொலைபேசியுடனேயே கழிக்கின்றனர். தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த வலைத்தளங்கள் இன்று பலரின் மனநிலையையே மாற்றும் அளவிற்கு செல்வாக்கு செலுத்துகின்றன. தொழில்நுட்பம் மனிதனை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் பயனும் பாதிப்பும் இருக்கின்றன.
இன்றைய சமூகத்தில் ஒரு நல்ல மனிதரை அவமதிக்க வேண்டுமென்றால் அதற்கான எளிதான கருவியாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. உண்மையாகவும் நேர்மையாகவும் வாழும் ஒருவரைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பினால், அதனை ஆராயாமல் நம்பத் தயாராக இருப்பவர்கள் ஏராளம். ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி அவதூறாக எழுதினால், அதற்கு கீழே பலர் “லைக்” செய்வதற்கும், கேலியாக கருத்து எழுதுவதற்கும் தயங்குவதில்லை.
இது வெறும் தொழில்நுட்பத்தின் பிரச்சினை அல்ல. இது மனித மனங்களுக்குள் மெதுவாக ஊறிக்கொண்டிருக்கும் நச்சுத்தன்மையின் வெளிப்பாடு. பொறாமை, வஞ்சகம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் வளரும்போது உண்மையை விட பொய்யை நம்புவதும், நீதியை விட அநீதியை ஆதரிப்பதும் எளிதாகிவிடுகிறது.
இன்று பலர் “பணம் இருந்தால் எதையும் செய்யலாம்” என்ற தவறான எண்ணத்தில் வாழ்கின்றனர். ஆனால் பணத்தால் அதிகாரத்தை வாங்கலாம்; மனிதர்களை வாங்கலாம்; புகழை வாங்கலாம். ஆனால் உண்மையை வாங்க முடியாது. நீதியையும் தர்மத்தையும் வாங்க முடியாது. இறைவனின் நீதிமன்றத்தில் பணத்தின் மதிப்பு இல்லை; அங்கே உண்மைக்கும் நேர்மைக்கும் மட்டுமே மதிப்பு உண்டு.
எனவே சகோதரராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் ஒருவர் தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்கத் துணியுங்கள். உண்மையின் பக்கம் நில்லுங்கள். தர்மத்தின் பாதையில் நடக்குங்கள். சில நேரங்களில் உண்மையின் பாதை தனிமையானதாக இருக்கலாம். ஆனால் அந்த பாதை ஒருபோதும் தோல்விக்குக் கொண்டு செல்லாது.
மற்றவர்களின் குறைகளைத் தேடுவதற்கு முன் நமது உள்ளத்தை ஆராய்வோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அகங்காரம், வெறுப்பு ஆகியவற்றை அகற்ற முயல்வோம். நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம். அன்பையும் மனிதநேயத்தையும் வளர்ப்போம்.
ஏனெனில் உலகை மாற்றுவதற்கு முன் மனிதன் தன்னை மாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் மனதை சுத்தப்படுத்தத் தொடங்கும் நாளே சமூகமும் சுத்தமடையும் நாள். அந்த நாளில் நீதியும் தர்மமும் புத்தகங்களில் மட்டும் அல்லாமல் மனிதர்களின் வாழ்க்கையிலும் மீண்டும் வாழத் தொடங்கும்.
நாம் அனைவரும் ஒரு கேள்வியை நமக்குள் கேட்போம்:
“நான் சமூக ஊடகங்களில் மற்றவர்களை மதிக்கிறேனா? உண்மையின் பக்கம் நிற்கிறேனா? என் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புகிறேனா?”
இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் நமது எதிர்காலத்தையும், நமது சமூகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
உண்மையை விதைப்போம். தர்மத்தை வளர்ப்போம். மனிதநேயத்தை காப்போம். அப்போதுதான் நமது வாழ்க்கை உண்மையான ஒளிமயமான வாழ்க்கையாக மலரும். என்றும் அன்புடன் கலைஞர் குமாரு யோகேஸ்வரன்.
Weniger anzeigen
