மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று இரவு கல்முனை – நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.
அங்கு அனோஜனின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்த அவர், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,
சவூதி அரேபியாவில் அனோஜனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் அவசர கோரிக்கை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சவூதி அரேபிய மன்னரிடமும் மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதோடு மட்டுமின்றி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையையும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
