‘பூமியில் வாழ்ந்தவர்கள் மரணித்த பின்னர் தங்கள் வாழ்க்கையை மீட்டிப் பார்க்கும் ஓர் உத்தி மூலமாக வாழ்க்கைக்கான அநேக செய்திகளை ஆத்மாக்களின் அழுகை நூலின் மூலம் ந.ப.கங்கா அவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார். இவை வாழ்கின்றவர்களை சிந்திக்க வைக்கும் வழிப்படுத்தும் கதைகளாகும்’ என நயப்புரை நிகழ்த்திய தமிழாசிரியர் கவிஞர் வே.முல்லைத்தீவன் குறிப்பிட்டார்.
ஈழத்தின் பெண் படைப்பாளியும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையின் முகாமைத்துவ உதவியாளருமான ந.ப.கங்கா என அறியப்பட்ட பகீரதன் கங்காஜினி ஆக்கிய ‘கோள்மூட்டி குரங்கு’ சிறுவர் கதைகள், ‘ஆத்மாக்களின் அழுகை’ கதைகள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஈழத்தின் கிளிநொச்சி நகரில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் முற்பகல் 9:30 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் அரச இலக்கிய விருதாளரும் நூலகருமான கவிஞர் வேல் லவன் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக மூத்த எழுத்தாளர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள் அவர்கள் பங்கேற்றார்.
தொடக்கமாக
பங்கேற்பாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர் ஏற்றுதல், அக வணக்கம் என்பன முறையே இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை இளைய அறிவிப்பாளர் கவிஞர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கொ.டயான் அவர்கள் தொகுத்து வழங்கினார். தனக்குரிய தனித்துவ தமிழ் நடையோடு அவர் நிகழ்ச்சிகளை நகர்த்திச் சென்றார்.
தமிழ்மொழி வாழ்த்தினை ஆசிரியர் குகேந்திரன் கஜானணி, ஆசிரியை ஜேசுதாசன் லிந்துஜா, மாணவி பகீரதன் திசாங்கி ஆகியோர் நல்லிசையோடு இசைத்தனர்.
மாணவி பு.தருண்யா அவர்கள் வழங்கிய வரவேற்பு நடனம் அரங்கில் கலை பரவச் செய்தது. வரவேற்பு உரையினை பிரியன் டிலக்சனா நேர்த்தியாய் வழங்கினார்.
நாடக ஆசிரியரும் நடிகருமான கலைஞர் ஏழுமலைப்பிள்ளை அவர்கள் ஆசியுரை வழங்கினார்.
தலைமை உரை நிகழ்த்திய வேல் லவன் அவர்கள், ‘ஈழத்து படைப்பாளர்கள் நவாலியூர் சோமசுந்தரப்பிள்ளை அவர்கள் உள்ளிட்டவர்களின் படைப்புகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, ஈழத்துப் படைப்புகள் எத்தனை மேன்மையானவை, அதன் தொடர்ச்சியாக ந.ப.கங்கா அவர்கள் எங்கள் முன்னே மிளிர்கின்றார்’ என்றார்.
கோள்மூட்டி குரங்கு, ஆத்மாக்களின் அழுகை ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக உரையினை யோ.புரட்சி கவிதை நடையில் வழங்கினார். ‘ஈழநாதம் தன்னில் எழுதி வந்த காலநாதம் கங்கா’ என அவர் குறிப்பிட்டார். ந.ப. கங்கா அவர்கள் போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நூல்களையும் நிகழ்வின் பிரதம விருந்தினர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வெளியிட்டு வைக்க பிரவீன் நகைமாடம் உரிமையாளர் தியாகராசா நரேன் அவர்கள் முதலாவது பிரதிகளை பெற்றுக்கொண்டார்.
இரண்டு நூல்களின் நயப்புரைகளை அளவான நேரத்தில் யாவர்க்கும் புரியும் படி தமிழாசிரியர் கவிஞர் வே.முல்லைத்தீபன் வழங்கினார்.
சிறுவர் கதைகள் மூலம் சொல்லப்பட்ட வழிகாட்டல்களின் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார். ஆத்மாக்களின் அழுகை நூலின் கதைகள் குடும்ப வாழ்வியலை இன்றைய சமூக ஓட்டத்தை நிதர்சனமாக தெளிவிக்கின்றன என்றார் அவர்.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் தனது உரையில், இலக்கியம் படைப்பவர்கள் குடும்பம் சமூகம் என்பவற்றில் தாக்கம் செலுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார். ரஷ்ய, கேரள எழுத்தாளர்கள் இருவரது வாழ்க்கையை குறிப்பிட்ட அவர், சிலரை சிலரின் படைப்புகள் மதிக்கப்பட்ட அளவிற்கு சிலர் மதிக்கப்படவில்லை என்றார். காரணம் படைப்பையும் வாழ்க்கையையும் வேறு வேறான கோணத்தில் அவர்கள் கொண்டு சென்றமை என்றார் அவர். வழிகாட்டுபவர்கள் வாழ்க்கையிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும். அதுவே படைப்பாளனின் முக்கிய கடமை என்றார் அகளங்கன்.
மாணவி பகீரதன் ஆரபி அவர்களின் நடனக்காட்சி நிகழ்விற்கு இன்னும் ஒரு சிறப்பானது. பதிப்பாளர் சார்பில் உரை நிகழ்த்திய விஜய் பதிப்பகம் எஸ். விஜய் அவர்கள் ந.ப.கங்கா அவர்களின் படைப்புகளை உள்வாங்கி அச்சாக்கம் செய்த அனுபவங்களை பகிர்ந்தார்.
ஏற்புரையினை நூலாசிரியர் ந.ப.கங்கா வழங்கினார்.
அளவான நேரத்தில் தகுதியான இலக்கியப் பகிர்வுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. யாவருக்கும் அன்பின் மதிய உணவு வழங்கப்பட்டது.
Weniger anzeigen
