திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
திலீபன் சிலை அகற்றப்பட்டதை கண்டிப்பதாக தெரிவித்த அவர், “சிலையை அகற்றிவிட்டு அதற்கும் அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறுவது அதைவிடவும் தவறான செயற்பாடாகும்” எனக் குறிப்பிட்டார். மேலும், பொலிஸாரே சிலையை அகற்றியதாகக் கூறப்படுவதாகவும், மாநகர சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், “அநுர அரசாங்கம் செய்த கேவலமான செயற்பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த தேர்தலில் பிரபாகரனின் தாயாரின் பெயரில் துறைமுகம் அமைப்போம் எனக் கூறியவர்கள், இன்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, “பயங்கரவாதியான ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி தலைமையில் அஞ்சலி செலுத்த முடியுமென்றால், அகிம்சை வழியில் போராடிய திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?” என சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
